Saturday, January 25, 2020

ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ்: சீனாவில் இதுவரை 41 பேர் பலி

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் வேகமாக பரவுவதைத் தடுக்க சில நகரங்களில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டதால், சுமார் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்திற்குட்பட்ட 1287 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

வைரஸ் தாக்கம் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளதுடன், பிரான்ஸில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குட்பட்ட மூவர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவின் லூனார் எனப்படும் புதுவருட கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் , அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் அச்சத்தினால் 13 நகரங்களுக்கான சுற்றுலா பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நகரங்களுக்கு செல்லவோ அங்கிருந்து வெளியேறவோ வேண்டாமென அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் அதிகம் காணப்படும் ஹூபெய் மாகாணத்தில் சுமார் 36 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர்.

வைரஸ் தாக்கம் முதலில் அடையாளங்காணப்பட்ட சீனாவின் வுஹான் நகரில் 11 மில்லியன் பேர் வசித்து வருவதுடன், அங்கு ஆயிரம் கட்டில்களைக் கொண்ட வைத்தியசாலையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகள் ஆறு நாட்களில் நிறைவடையவுள்ளதாக சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மனிதர்களின் சுவாச உறுப்புகள் மூலமாக இந்த வைரஸ் பெரும்பாலும் பரவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வுஹானில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வைத்திய குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

1230 சுகாதார அதிகாரிகள் மற்றும் இராணுவத்தின் 135 சிறப்பு வைத்திய அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸிற்கு இலக்கான ஒருவர் முதன்முறையாக அவுஸ்திரேலியாவில் அடையாளங் காணப்பட்டுள்ளார்.

இதனை அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்கொட் மொரிசன் இன்று உறுதிப்படுத்தினார்.

மெல்பர்னில் சிகிச்சை பெற்று வரும் குறித்த நோயாளியின் உடல் நிலை கவலைக்கிடமாக இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

50 வயதான இந்த சீன பிரஜை, கடந்த 19 ஆம் திகதி சீனாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார்.

எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் இதுவரை இலங்கையில் கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இந்த வைரஸ் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்நோக்க தயார் நிலையிலுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜயசிங்க குறிப்பிட்டார்.

இலங்கையில் பெருந்திரளான சீன பிரஜைகள் வாழ்வதால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்களும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக டொக்டர் அணில் ஜயசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, வுஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுவதாக சீனாவிற்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று குறித்து இலங்கை மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக சீனாவிற்கான இலங்கையின் பதில் தூதுவர் கே.யோகநாதன் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com