Friday, January 31, 2020

வியாழேந்திரனிடம் 3 சொகுசு வீடுகள் யோகேஸ்வரனிடம் 3 வாகனங்கள். பிரமச்சாரிக்கு எதற்கு 3 வாகனம்? ஜெயனந்த மூர்த்தி

தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வியாழேந்திரனிடம் 3 சொகுசு மாடி வீடுகள் உள்ளன. அதுவும் 2 வீடு முன்னுக்கு முன்னுக்கு உள்ளது. இதை கட்ட அவருக்கு எவ்வாறு பணம் வந்தது.

இவ்வாறு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மேலதிக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

வாழைச்சேனை பேத்தாழை பிரதேசத்திலுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கூட்டம் பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்னர் வீடு மற்றும் வாகன வசதிகள் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினராக வந்ததும் வீடு மற்றும் வாகன வசதிகள் உள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனிடம் 3 சொகுசு வாகனங்கள் உள்ளன. ஒரு பிரம்மச்சாரிக்கு எதற்கு 3 சொகுசு வாகனங்கள். இதனை மக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நானும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். நானும் உங்களது வாழ்க்கை போன்று சராசரியாக வாழ்ந்து வருகின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தொடர்ந்து அனுப்பினால் அவர்கள் நிறைய சொத்துக்களுடன் இருப்பார்கள். நாம் இவ்வாறு தான் எப்பவும் இருக்க வேண்டும் சற்று சிந்தியுங்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போராட்டம் மற்றும் தேசியம் தெரியாது. அவர்களிடம் எதுவும் இல்லை. பொய் வாக்குறுதியையே மக்களுக்கு வழங்குகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு சம்பந்தன் வருவார். பூனை பால் குடிப்பது போல் கண்ணை மூடிக் கொண்டு தமிழர்களின் ஒற்றுமையை சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது எல்லோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் என்று மேடையில் பேசுவார்.

போராட்டம் நடைபெற்ற போதுதான் தேசிய தலைவரை சர்வதேசம் பார்த்தது. நமது பிரச்சனை தொடர்பில்தற்போது சர்வதேசத்திடம் ஒன்றும் இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ரணில் ஆட்சியின் அரசாங்கத்திற்கு பக்க பலமாக இருந்தார்கள்.

ரணில் ஆட்சிக் காலத்தில் 52 நாள் பிரச்சினை ஏற்பட்ட போது ரணிலை மீண்டும் பிரதமராக கொண்டு வருவதற்கு பாடுபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு கோடிக் கணக்கில் பணம் வழங்கப்பட்டது.

2004ம் ஆண்டு கருணா இயக்கத்தில் இருந்து தலைவருக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக விலகினார்.

விலகும் போது கிட்டத்தட்ட ஆறாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அவ்வாறு விலகியதன் காரணமாக இன்று எமது மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள்.

இல்லாவிடின் இன்றும் யுத்தம் நடக்கும். போராட்டம் அழிந்து போனது மற்றும் தலைவர் இல்லாமல் போனது எங்களுக்கு கடும் வேதனை. இதுபோன்ற தேசிய தலைவன் இனி பிறக்கவே முடியாது என்பதை கூறிக் கொள்கிறேன்.

எப்போதோ எமது பிரச்சினையை ஐ.நா தீர்த்து இருக்கும். எமது தலைவரிடம் இருந்த முப்படைகள் எல்லாவற்றையும் அழித்தது சர்வதேசம். எனவே இவர்களின் பொய்களை நம்ப வேண்டாம் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com