Tuesday, January 28, 2020

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான 2 வது நபர் வைத்தியசாலையில்! முகமூடி அணிய ஆலோசனை.

உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இரண்டாவது நோயாளியொருவர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம் சற்று முன்னர் கொழும்பிலுள்ள உயர்ந்த கட்டிடமொன்றில் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை வைத்திய அதிகாரிகள் வைத்திசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். எனினும் அவர் குறித்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளாரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இலங்கையில் முதலாவதாக கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்ட சீனப் பெண் பயணம் செய்த பிரதேசங்கள் பற்றிய தகவளை தேடிப்பிடித்த அதிகாரிகள் அது தொடர்பாக அறிவித்துள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி இலங்கைக்கு வந்த குறித்த பெண் 24ஆம் திகதிவரை பல பகுதிகளுக்கு சுற்றுலா சென்றிருக்கின்றார். அதன் அடிப்படையில்:

19ஆம் திகதி – நீர்கொழும்பு கெட்வே எயார்போட் காடின் விடுதி

20ஆம் திகதி – சீகிரிய ஜங்கல்ஸ் ஹோட்டல்

21ஆம் திகதி – சீகிரியா, கண்டி, கவுடுபெலல்ல, கண்டி அமாயா ஹில்ஸ் விடுதி

22ஆம் திகதி – ஓக் ரே விடுதி, நுவரெலியா அரலிய கிறீன் ஹோட்டல்

23ஆம் திகதி – அவுங்கல்ல ரியூ விடுதி

24ஆம் திகதி – ரம்பார்ட் ஹோட்டல் என் ரெஸ்டுரன்ட் அவுங்கல்ல

இந்நிலையில் அவர் தற்போது இரண்டாவது நாளாக இன்று கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இதேநேரம் சீனா பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றுக்கொண்டிருந்த எமது மாணவர்கள் விசேட விமானமூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர். ஆனாலும் நாடு திரும்பிய 50 பேர் மீதும் முறையான பரிசோதனை நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று வந்தடைந்த 50 மாணவர்களுக்கு சாதாரண மருத்துவ பரிசோதனையே நடத்தப்பட்டதாக விமான நிலைய மருத்துவ பிரிவின் மருத்துவர் சந்திக்க பண்டார தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுகின்ற நிலையில் சீனாவில் இருந்து வந்த மாணவர்களுக்கு முறையான முழுமையான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

எது எவ்வாறாக இருந்தாலும் அந்த மாணவர்கள் சமூகத்தில் விடுவிக்கப்படவில்லை என்றும் அவர்களை தியத்தலாவ இராணுவ முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது முறையான பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களை அங்கு 14 நாட்கள் வைத்திருந்து நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கவில்லை என்பது தெரியவந்தபின்னரே விடுவிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உயிர்கொல்லி கொரோனா வைரஸினால் சீனாவில் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 1400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4000ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இந்த வைரஸ் தாகத்துக்கு ஈடு கொடுக்கும் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவலாம் என்கிற அச்சம் காணப்படுகிற நிலையில் கொழும்புக்கு வருகிறவர்கள் முகத்தை மறைக்கும் துணியிலான (Face Mask) கவசத்தை அணியுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அதிகமான சீனப் பிரஜைகள் இருப்பதால் குறித்த வைரஸ் பரவும் அபாயம் நிலவுவதாக கொழும்பு பிரதான வைத்திய அதிகாரி மருத்துவர் ருவன் விஜமுனி தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com