வடகிழக்கில் நிலம் பறிபோகுதாம், புலம்பெயர்ந்த தமிழரை வந்து குடியேறட்டாம். அழைக்கின்றார் அடைக்கலநாதன்.
வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் மக்கள் மீளவும் இந்த மண்ணிற்கு வர வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தையடுத்து அந்த அமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட கிளையின் கூட்டம் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, 'இந்தியாவின் குடியுரிமையச் சட்டத் திருத்தத்தில் ஈழத் தமிழ் மக்கள் உள்வாங்கப்படவில்லை.
அந்த நிலைப்பாட்டிற்கு ஆதரவும் அதேநேரம் எதிர்ப்பும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாக பல அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறுபட்ட கோரிக்கைகளை இந்த விடயத்தில் விடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் என்னைப் பொறுத்தமட்டில், தாயகத்திலுள்ள எங்களுடைய மக்களின் நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ஆகவே அது தடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. அதற்காக இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள எமது மக்கள் இங்கே வர வேண்டும். அதனூடாகவே அவர்களது காணிகள் பறிபோவதை தடுத்து பாதுகாக்க முடியும்
இன்றைய நிலைமையில் அந்த மக்களின் காணிகள் எல்லாம் அத்தீமீறி களவாடப்படுகிறது. ஆகையினால் இங்கிருந்து சென்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கின்ற மக்கள் அங்கே குடியுரிமையைப் பெற்று இருப்பார்களானால் அவர்களுடைய அந்த நிலங்கள் தொடர்ந்து களவாடப்படும்.
எனவே காணிகள் காக்கப்படவேண்டுமானால் புலம்பெயர் தமிழர் இங்குவந்த எமது நிலத்தை காப்பாற்றவேண்டும் என்றும் மாறாக ஐரோப்பாவிலிருந்து கொண்டு இங்கு நாடுவேண்டுமென்று கோஷமிடக்கூடாது என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment