ராஜிதவின் வெள்ளை வான் விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணை -கமால் குணரட்ன
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தில் முன்னாள் சுகாதார அமைச்சரின் ஏற்பாட்டில் சிலர் முன்வைத்த வெள்ளை வான் மற்றும் முதலைக்கு இரையாக்கியமை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெறுமென்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன கூறியுள்ளார்.
பன்னிபிட்டியவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, முன்னாள் சுகாதார அமைச்சர் நடத்திய ஊடக மாநாட்டு நாடகத்தின் சூத்திரதாரி யார் என்பது விசாரணைகளில் தெரியவரும். அத்துடன் அந்த நாடகத்தின் நடித்தவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? அந்த நாசக்கார குண்டர்கள் யார்? என்பது விரைவில் பொது மக்களுக்கு தெரியவரும் என்றும் அவர் மேலும் கூறினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சேறுபூசும் பிரசாரம் தொடர்ந்த போதிலும் தேர்தலின் பின்னர் அரசியல் பழிவாங்கள் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியர் கடத்தப்பட்ட சம்பவம் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு அங்கம் என்றும் அவர் கூறினார்.
மேற்படி சம்பவம் தொடர்பான அனைத்து விடயங்களும் வெளியாகியுள்ளன. அவற்றைப் பற்றி நாம் ராஜதந்திர சமூகத்துக்கு ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். புதிய அரசாங்கத்தை கஷ்டத்தில் போடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி இது. இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து விபரங்களும் இப்போது வெளிவந்துள்ளதால் அரசாங்கத்துக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ எவரும் அபகீர்த்தியை ஏற்படுத்த முடியாது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, வெள்ளை வான் விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பரபரப்பான கருத்துகளை வெளியிட்டிருந்த அந்தெனி பெர்ணான்டோ மற்றும் அதுல என்ற இருவரும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு கடவத்த பிரதேசத்தில் இருவரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன நடாத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அந்தெனி பெர்ணான்டோ மற்றும் அதுல ஆகிய இருவரும் வெள்ளை வான் கடத்தல் விவகாரம் தொடர்பில் பரபரப்பான சில கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.
வெள்ளை வானில் சாரதியாக கடமை புரிந்ததாக அடையாளப்படுத்திக்கொண்டு கருத்து வெளியிட்டிருந்த அந்தெனி பெர்ணாந்து, தாம் மொணராகலையில் உள்ள ஆட்கடத்தல் முகாமில் சாரதியாக பணிப்புரிந்ததாகவும், வெள்ளை வானில் கடத்தப்படுபவர்கள் குறித்த முகாமுக்கு கொண்டுவரப்பட்டு பாகங்களாக வெட்டப்பட்டு குறித்த முகாமுக்கு அருகில் காணப்படும் காட்டுப்பகுதியில் உள்ள முதலை கிணறொன்றில் வீசப்பட்டதாகவும் கூறியிருந்தார்
0 comments :
Post a Comment