Saturday, December 7, 2019

எங்கள் நாட்டை நாங்கள் ஆட்சிபுரிய அனுமதியுஙகள்! தமிழக அரசியல்வாதிகளின் மூகத்தில் குத்தினார் முரளி.

தமிழக அரசியல்வாதிகள் இலங்கையர்களின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் எங்கள் அரசாங்கத்தை ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும். அதிபர் கோட்டாபய ராஜபக்சவை நான் ஆதரிக்கிறேன். ஏனென்றால் அவர் எங்கள் நாட்டை வழிநடத்த சரியான நபர்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்துஸ்தான் ரைம்ஸ் இதழுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு

கே: வெற்றிடமாக உள்ள வடக்கு மாகாண ஆளுநர் பதவியை அதிபர் கோட்டாபய ராஜபக்ச உங்களுக்கு வழங்கியுள்ளார் என்றும் அதனை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் என்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. அது உறுதிப்படுத்தப்பட்ட செய்திதானா?

“இல்லை, இந்தச் செய்தி பேஸ்புக் மூலம் பரவிய ஒரு வதந்தி. எனக்கு அந்தப் பதவி வழங்கப்படவில்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் அரசியலில் ஆர்வம் காட்டியதில்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறேன். நான் ஒரு விளையாட்டு வீரன், கிரிக்கெட் வீரர், அரசியல்வாதி அல்ல. மக்களின் நன்மைக்கான எனது அறக்கட்டளை, ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் இலங்கை மக்களுக்கு உதவி செய்து வருகிறது.நிச்சயமாக என்னால் முடிந்த அளவுக்கு எந்த வகையிலும் மக்களின் வாழ்வை மேம்படுத்த உதவுவேன்”

கே: நீங்கள் வடக்கு அல்லது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. நீங்கள் ஒரு ‘இந்திய வம்சாவளி’யை சேர்ந்தவர். மேலும் இலங்கை தமிழர். ஆனால் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தின்போது நீங்கள் அவருக்கு அளித்த ஆதரவு இலங்கையின் அந்தப் பகுதிகளில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பெரும்பான்மையான தமிழர்கள் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். நீங்கள் ஒரு சர்வதேச விளையாட்டு நட்சத்திரம். மேலும் நீங்கள் ஒரு ரோல் மொடல். நீங்கள் அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

“இலங்கை ஒரு சின்னஞ் சிறிய நாடு. இங்கு எங்களுடன் பல மதத்தினர் கலந்து உள்ளனர். எல்லோருக்கும் ஒரு மரியாதை இருக்கிறது. நானே ஒரு தமிழன். நான் கொழும்பில் வசிக்கிறேன். இந்த நாட்டில் உள்ள மற்ற குடிமக்களைப் போலவே நம் அனைவருக்கும் சமமான ஒரே உரிமைதான் உண்டு. நான் இலங்கை நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடும்போது, ​​ஒவ்வொரு இலங்கையினரும் - சிங்கள பெரும்பான்மையினர் உட்பட அனைவரும் என்னை ஆதரிக்கின்றனர். இதேபோல், இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களையும் நான் ஆதரிப்பேன். எனக்கு 47 வயது ஆகிறது. எங்கள் வரலாற்றில் பல சிக்கலான காலகட்டங்கள் இருந்துள்ளன. எழுபதுகளில் கலவரம் ஏற்பட்டது, மீண்டும் எண்பதுகளில் நூற்றுக்கணக்கான சிங்கள மற்றும் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு தமிழ் அல்லது சிங்களவர்களும் மோசமானவர்கள் என கூறமுடியாது. அல்லது எந்த ஒரு பெரும்பான்மை சமூகத்தினர் அனைவரும் மோசமானவர்கள்தான் என அர்த்தப்படுத்த முடியுமா?”

கே: தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிபர் கோட்டாபயராஜபக்சவுக்கு எதிராக உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு இந்தியா உங்களின் இரண்டாவது வீடாக உள்ளது. ராஜபக்சவுடனான உங்கள் விசுவாசத்தை அங்குள்ள மக்களுக்கு எவ்வாறு விளக்குகிறீர்கள்?

“நீங்கள் சொல்லுங்கள், உங்கள் குடும்பத்திற்குள் ஏதேனும் பிரச்னை இருந்தால், உங்கள் அண்டை நாட்டுக்காரர்கள் தலையிடுகிறார்களா? தமிழக அரசியல்வாதிகள் இலங்கையர்களின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் எங்கள் அரசாங்கத்தை ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும். அதிபர் கோட்டாபய ராஜபக்சவை நான் ஆதரிக்கிறேன். ஏனென்றால் அவர் எங்கள் நாட்டை வழிநடத்த சரியான நபர். அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன் பல ஆண்டுகள் வரை எந்த முன்னேற்றமும் இல்லை. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. எதுவும் நகரவில்லை. அதிபர் ராஜபக்ச ஒரு நிர்வாகி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் ராணுவ வீரர். அவர் ஒரு புத்திசாலி. அவர் சீர்திருத்தங்களைச் செய்வார். வேறு பாதையில் செல்வார். வாழ்க்கையை மேம்படுத்துவார். மேலும் சரியானதைச் செய்வார்” என்று தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com