Sunday, December 1, 2019

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல்: நாட்டின் நற்பெயருக்கு சர்வதேச ரீதியில் பாதிப்பு ஏற்படுமாம்! சஜித்

சுவிட்ஸர்லாந்து தூதரக பெண் அதிகாரி வெள்ளை வானில் கடத்தப்பட்டமை குறித்து உடனடி விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சில நாட்களில் பதிவாகிய இந்த சம்பவத்தினால் நாட்டின் நற்பெயரே சர்வதேச அரங்கிற்கு முன்பாக பாதிக்கப்படுவதாகவும் அதனைக் கருத்திற்கொண்டு உடனடி ஆழமான விசாரணை அவசியம் என்றும் சஜித் பிரேமதாஸ நேற்று அறிக்கை வெளியிட்டுக் கூறியுள்ளார்.

பெரும்பான்மை வாக்காளர்கள் தெரிவுசெய்த இந்த அரசாங்கத்திடம் இருந்து ஜனநாயகம், சுதந்திரம், சமாதானம் என்பவற்றையே எதிர்பார்க்கின்றார்கள்.

அந்த வகையில் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது புதிய அரசாங்கத்தின் தலையாயக் கடமை என்பதையும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல திட்டமிட்ட வகையில் திறமையான பொலிஸ் அதிகாரிகள் மீது பழிவாங்கும் படலமொன்று ஆரம்பிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் குறித்தும் சஜித் பிரேமதாஸ அறிக்கையில் நினைவுப்படுத்தியுள்ளார்.

சில ஊடகவியலாளர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், இவ்வாறான செயற்பாடுகள் தகவல் அறியும் உரிமையை பறிக்கின்ற அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு சமமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகவே இப்படியான நிலைமைகளை கருத்திற்கொண்டு உடனடி நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதையும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com