மொட்டு - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் முறுகல். முக்கியஸ்தர்களிடையே அவசர சந்திப்புக்கு ஏற்பாடு.
எதிர்வரும் சில தினங்களில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டமைப்பு, மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கும் பட்சத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
இதற்கமைய, எதிர்வரும் தேர்தலில், கை அல்லது வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு, தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், இந்தத் தீர்மானத்திற்கு சில தரப்பினர் எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் எதிர்வரும் சில தினங்களில் இந்த விடயம் தொடர்பாக கூடி ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கிருந்தது.
இதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் தலைவர்களாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியன ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment