ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை உருவாக்கி தன்னை விசாரிக்குமாறு றிசாட் கோரிக்கை
வில்பத்து சரணாலயம் மற்றும் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தம் மீது சுமத்தும் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரிக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளதுடன், ஜனாதிபதிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவரான தன்னை இலக்கு வைத்து, பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சிலர் செயற்படுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வில்பத்து சரணாலயத்தை அழித்தமை, முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தியமை, பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்தமை என்பன தம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை என ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்புள்ளது என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணை நடத்தியதோடு, பொலிஸ் விசாரணையின் போது தான் நிரபராதி என அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் சபாநாயகருக்கு அறிவித்திருந்தார்.
இவ்வாறான நிலைமையில், மீண்டும் இந்த விடயம் தொடர்பில் பேசி, நாட்டில் பேதங்களை உருவாக்குவதன் மூலம் நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த அவர்கள் முயற்சிப்பதாக ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment