Friday, December 27, 2019

தேசிய கீதம் தமிழில் பாடமுடியாது என அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. டலஸ் அழகப்பெரும

சுதந்திர தின நிகழ்வில் தேசியகீதம் இசைக்கப்படும்போது தமிழ் மொழி புறக்கணிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் தவறானது என கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

73வது சுதந்திர நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை இசைப்பதற்கும், தமிழ் மொழியை புறக்கணிப்பதற்கும் அரசாங்கம் இதுவரையில் எவ்விதமான உத்தியோகப்பூர்வ தீர்மானங்களையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசாங்கம் அனைத்து செயற்பாடுகளிலும் அனைத்து இன மக்களையும் இணைத்தே பயணிக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம் பெற்றவுள்ள சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தியும், அதனை தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள மாறுப்பட்ட கருத்துக்கள் ஏற்பட்டமை தொடர்பிலும் தெளிவுப்படுத்தலை ஏற்படுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்விதமான உத்தியோகப்பூர்வமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்ட அமைச்சர் தேசிய நல்லிணக்கத்திற்கு மொழிகளின் முக்கியத்துவம் இன்றியமையாதது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் முறையான அந்தஸ்த்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அனைத்து இன மக்களையும் எவ்வித வெறுப்புக்களும் இன்றி பொதுவாக செயற்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இல்லாத ஒரு விடயத்தை குறிப்பிட்டுக் கொண்டு தமிழ் மக்களின் மத்தியில் வன்மத்தை தூண்டும் செயற்பாடுகளே இடம் பெறுகின்றதாக குறிப்பிட்ட அமைச்சர்,

நாட்டில் இரண்டு மொழி வழக்கில் உள்ள நிலையில் இரண்டு இனத்தவர்களும் இருமொழியிலும் தேர்ச்சிப்பெற்றிருத்தல் அவசியம் எனவும் கூறியுள்ளார்.

மொழி ஆளுமையினை மேம்படுத்தவதற்கு பாடசாலை மட்டத்தில் இருந்து புதிய திட்டங்களம், கடந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளும் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படும் எனவும் கூறிய அவர் ,அரசியல் நோக்கங்கள் , மற்றும் பழிவாங்கல்கள் என்பவற்றை கல்வித்துறையில் காண்பிப்பது எதிர்கால தலைமுறையினரின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமெனவும் தெரிவித்துள்ளார்.

எனவே அரசாங்கம் எந்நிலையிலும் இனங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை வழங்காது, தகுதி மற்றும் திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கி அனைத்து செயற்பாடுகளிலும் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டே பயணிப்போம் எனவும் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com