மகாநாயக்க தேரர்களுக்கும் நாட்டை அழிக்கும் சக்திகளுடன் தொடர்பாம். மஹிந்தரை எச்சரிக்கும் தம்மாலோக தேரர்.
ஜனாதிபதி கோட்டாபய உட்பட ராஜபக்ச குடும்பத்தை வீழ்த்துவதற்கும், நாட்டை அழிக்கவும் முயற்சி செய்கின்ற சில சக்திகள் ஒருசில மகாநாயக்க தேரர்களையும் விலைகொடுத்து வாங்கியிருப்பதாக கொழும்பு நாரஹேன்பிட்டி எலன் மெத்தினியாராமய விகாரையின் விகாராதிபதி உடுவே தம்மாலோக்க தேரர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதனால் அண்மையில் நெருக்கமாக சேர்ந்துகொண்ட ஒருசில நபர்கள் குறித்து எச்சரிககையாக இருக்கும்படியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு பௌத்த மக்களின் புனித நாட்களில் ஒன்றான உந்துவப் போயா தினமான இன்றைய தினம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்தியாவின் அசோக்க மன்னனின் புதல்வியான சங்கமித்தை பிக்குனி தலைமையில் 11 பிக்குனிகள் வெள்ளர கிளையை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தினத்தை நினைவுகூரும் போயா தினமான இன்றைய தினம் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பௌத்த விகாரைகளில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அரச போயா பௌத்த மத வழிபாடுகளும், பிரசங்கமும் இன்றைய தினம் அலரிமாளிகையில் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதமரின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, மூத்த புதல்வனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பல பிரமுகர்களும், ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த காலங்களில் யானைக் குட்டி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட கொழும்பு நாரஹேன்பிட்டிய எலன் மெத்தினியாராமய விகாரையின் விகாராதிபதி உடுவே தம்மாலோக்க தேரர் இந்த நிகழ்வில் உரையாற்றினார்.
இலங்கையை அழிப்பதற்காக சில சக்திகள் குறிப்பாக அடிப்படைவாத அமைப்புக்கள் ராஜபக்சவினரை அழிப்பதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதனால் அண்மைய நாட்களாக நெருக்கமாக செயற்படுபவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்கினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய உடுவே தம்மாலோக்க தேரர், இலங்கையை அழிப்பதற்கு முயற்சித்துவருகின்ற அடிப்படைவாத சக்திகள், அதற்கான முதற்கட்டமாக ஒருசில மகாநாயக்க தேரர்களையும், பௌத்த தேரர்களையும் விலைக்கு வாங்கியிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
0 comments :
Post a Comment