முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை தமிழர்களுக்கு மாபெரும் வெற்றி - கருணா அம்மான்
முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத புதிய அமைச்சரவை உருவாக்கமானது தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை சிங்கள மக்கள் காப்பாற்றிவிட்டனர் எனவும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் எதிர்கால திட்டம் குறித்து நேற்று (01) மாலை 5 மணி முதல் 7 மணிவரை மக்கள் சந்திப்பு இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை சிங்கள மக்கள் காப்பாற்றிவிட்டனர். முதல் தடவையாக 35 பேர் கொண்ட அமைச்சரவையில் எந்த முஸ்லிம் பிரதிநிதிகளும் இல்லாத அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக 20 வருடங்கள் ஆட்சி செய்யும் அத்துடன் எதிர்வரும் காலம் தமிழ் மக்களுக்கு பொற்காலமாகும்.
தமிழ் மக்களது உரிமைகளுக்காக போராடிய காலங்களில் சிவராம் எனும் பத்திரிகையாளர் என்னை சந்தித்து உங்களது போராட்டம் சர்வதேச மட்டத்தில் தெரியப்பட வேண்டும் என்றும் இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பேசப்பட வேண்டும் என்றும் இதற்காக தமிழ் மக்கள் சார்பில் கட்சி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கூறினார்.
இவரது இந்த யோசனை குறித்து நான் பல தடவைகள் தலைவர் பிரபாகரனிடம் எடுத்துக்கூறியும் அவர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. எனது வேண்டுகோளிற்கு இணங்கவே இறுதியில் தலைவர் ஒத்துழைத்தார். அவ்வாறு எங்களால் உருவாக்கப்பட்ட கட்சி தான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு.அன்று எங்களால் ஒரு கொள்கைக்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று கொள்கைகள் அற்றுபோயுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது.குறிப்பாக கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் 11 ஆசனங்களை பெற்றுக்கொண்ட கூட்டமைப்பு 7 ஆசனங்களை மட்டும் பெற்ற முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சு பதவியை விட்டுக்கொடுத்தது. இதனால் தமிழ் மக்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் புறந்தள்ளப்பட்டனர். ஆனால் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலங்களில் எந்த இனத்தையும் இரண்டாம் பட்சமாக பார்க்கவில்லை எனவும் தெரைிவித்தார்
0 comments :
Post a Comment