Saturday, December 28, 2019

பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளோருக்கு சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறார் மகிந்த தேசப்பிரிய.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பரிந்துரைக்கும் வேட்பாளர்களுக்கான பிணைப்பணத்தில் அதிகரிப்பு ஏற்பாடுத்தப்படாதுவிட்டால், நெருக்கடி நிலைமை ஏற்படும் அபாயம் இருப்பதாக தேர்தல் ஆணையகத் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டதாகவும், அதனால் அந்தத் தேர்தலில் கூடுதலான தொகையைச் செலவிட வேண்டியிருந்ததாகவும் தேசப்பிரிய கூறினார். தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட 70 கட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அக்கட்சிகளிலிருந்து அதிகமாக ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் போட்டியிட முன்வந்தால் , ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த அனுபவம் பொதுத்தேர்தலிலும் கிட்டும் என அவர் குறிப்பிட்டார். அரசியல் கட்சிகள் போன்றே சுயாதீன வேட்பாளர்களும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், அதற்கேற்ப அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுவது எச்சரிக்கைக்குரியதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

தற்போதும் 1981 ஆம் ஆண்டு குறித்த தொகையே அறவிடப்படுகின்றது எனவும், அன்று அரசியல் கட்சிகள் குறைந்த அளவே இருந்தன எனவும் அவர் தெளிவுறுத்தினார்.

அன்றைய காலப்பகுதியுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது தற்போது அதன் 50 மடங்கினால் அதிகரிக்கப்பட வேண்டும் அதாவது, கட்சியாென்றிலிருந்து போட்டியிடுபவர் 30000 ரூபாவும், சுயாதீன வேட்பாளர் 50000 ரூபாவும் செலுத்த வேண்டும் எனவும் தேசப்பிரிய தெரிவித்தார்.

பிணைப்பணத்தை உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளபோதும், அதனைத் திருத்துவதற்குப் பாராளுமன்ற ஒப்புதலை எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிடுகின்ற மகிந்த தேசப்பிரிய, பிணைப்பணத்தை அதிகரிக்காதுவிடின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பெபரல் அமைப்பு வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கையின்படி, தேவையற்ற அளவில் வேட்பாளர்கள் போட்டியிடுவதைத் தடுக்க வழிவகை செய்யப்படவேண்டும் எனவும், வேட்பாளர் ஒருவரிடம் பெற வேண்டிய தொகை குறைந்தளவு 10 இலட்சமாகவேனும் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment