Wednesday, December 4, 2019

அர்ஜூன மகேந்திரணை கைது செய்யுமாறு கோரி சிங்கப்பூர் சட்ட மா திணைக்களத்திற்கு ஆவணங்கள் அனுபியுள்ளார்களாம்!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்வதற்காக அவரை ஒப்படைப்பதற்கான கோரிக்கை அடங்கிய ஆவணங்கள் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் தெரிவித்துள்ளது.

குறித்த ஆவணங்கள் தொடர்பாக சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகவும் ஸ்ரீலங்கா சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட பிணை மற்றும் முறிகள் விற்பனையில் 10.058 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றிருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து இலங்கை அரசியலிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து பொதுச்சொத்து சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்ட முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக கடந்த ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது.

இதுதவிர, பேர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன மகேந்திரன், அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி பலிசேன உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அந்த வகையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்பாக இந்த வழக்கு இன்றைய தினம் முற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக முன்னிலையாகிய மேலதிக சொலிசிடர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க, சந்தேக நபரான அர்ஜுன மகேந்திரனை கைது செய்வதற்கும், அவரை நாட்டிற்கு அழைத்துவருவதற்கும் ஏதுவான ஆவணங்கள் சிங்கப்பூர் திணைக்களத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதோடு அந்த ஆவணங்களை ஆராயும் பணிகளை அந்நாட்டு சட்டமா அதிபர் திணைக்களம் ஆரம்பித்திருப்பதாகவும் தெரியப்படுத்தினார்.

இதேவேளை இந்த வழக்கில் 10ஆவது சந்தேக நபரான அஜஹான் கார்திய புஞ்சிஹேவா சிங்கப்பூரில் இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், அவரை அழைப்பதற்கான நோட்டிசை விடுக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதற்கு அமைய நீதிமன்றம் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேபோன்று வழக்கில் 06ஆவது சந்தேக நபரான ஜெப்ரி அலோசியஸ் 25 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கும் ஒருமாதகாலத்திற்கு சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் இன்றைய தினம் அனுமதியளித்துள்ளது.

இதனையடுத்து வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ஆண்டு செப்டம்பரில் அர்ஜுன மகேந்திரனை ஒப்படைப்பதற்கான 21,000 பக்க ஆவணத்தில் கையெழுத்திட்டார், இது சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஊடாக சிங்கப்பூர் அரசிடம் ஒப்படைக்க அனுப்பப்பட்டது.

எனினும் அவ்வாறான எந்த ஆவணமும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று சிங்கப்பூர் அரசாங்கம் கூறியிருந்தது.

இருப்பினும் இந்த ஆவணங்கள் ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழங்கப்பட்டதை அடுத்து, இலங்கையின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அத்திணைக்களம் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com