Sunday, December 22, 2019

மாணவர்களுக்கு ஹெலிகொப்டர் சவாரி வழங்கி ஊக்குவித்த பிரபல தொழிலதிபர்.

5ம் தர புலமைப் பரீட்சையில் சித்தியெய்திய சாய்ந்தமருது, மாளிகைக்காடு மற்றும் காரைதீவு பிரதேச மாணவர்களை கௌரவிக்கும் ஹெலிகொப்டர் சவாரி (21) சாய்ந்தமருது பௌஸி மைதானத்தில் நடைபெற்றது.

மக்கள் ஐக்கிய முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் பிரபல தொழிலதிபரும் சகுறா ஏவியேஷன் (SAKURA AVIATION) அதிபதியுமான றுஷான் மலிந்த பெர்ணான்டோவின் அனுசரணையில் இடம்பெற்ற இச் சவாரிநிகழ்வில் பங்கு கொள்ள சுமார் 300 மாணவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காரைதீவு முஸ்லிம் பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபை உப தவிசாளரும், ஜாஹிர் பவுண்டேசன் அமைப்பின் தலைவருமான ஏ.எம்.ஜாஹிரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வினை கண்டுகளிப்பதற்காக நூற்றுக் கணக்கான பொதுமக்கள் இங்கு வருகை தந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பல சுற்று சவாரி நடைபெற்றது.

ஆனால் காலநிலை மாற்றமடைந்து மழை இடையூறு ஏற்படுத்தியதால் பலநூறு மாணவர்களை சவாரி செய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்த இந்நிகழ்வை இடைநிறுத்த நேரிட்டது.

றுஷான் மலிந்த பெர்ணான்டோ ஜப்பானில் கல்வி பயின்றுள்ளதுடன் விமானி பயிற்சி நெறியினையும் பூர்த்தி செய்துள்ளார். "இலங்கையில் 2030 ஆண்டளவில் விமானிகளுக்கான தேவை அதிகரிக்கவுள்ளதால் இளம் தலைமுறையினரிடத்தில் விமானி தொழிற்துறையை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக" அவர் கருத்து தெரிவித்தார்.

இதுபோன்று அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பல்வேறு சமூக நற்பணி சேவைகளையும் இவர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று (22) 2வது நாளாக இச் சவாரி தொடராக இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எஸ்.அஷ்ரப்கான்).



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com