புதிய அரசில் ஊடக அடக்குமுறை ஆரம்பமாகியுள்ளது. சாடுகின்றது அல்ஜசீரா
கடந்த நவம்பர் மாதம 16 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஸ இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
இவர் ஜனாதிபதியாக தெரிவானதை அடுத்து பல வரவேற்கத்தக்க மாற்றங்களை நாட்டில் ஏற்படுத்தினார். இதனை யாராலும் மறுக்கு முடியாது.
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்று சில தினங்கள் கடந்த நிலையில் நவம்பர் 26ஆம் திகதி இலங்கையின் செய்தி இணையத்தளமான நியூஸ்ஹப் இணையத்தளத்தில் பொலிஸார் தீடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது பொலிஸார் நியூஸ்ஹப் ஊடக நிறுவனத்தில் உள்ள சகல சேர்வர்கள், மடிக்கணனிகள், கணனிகள் என அனைத்தையும் சோதனையிட்டனர்.
எவ்வாறாயினும் குறித்த சோதனைக்கு வந்த பொலிஸார் நியூஸ்ஹப் ஊடக நிறுவனத்தினால் புதிய ஜனாதிபதியாக தெரிவான கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்தே இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
எனினும் சோதனைக்கு வந்த பொலிஸார் குறித்த நிறுவனத்தில் அவ்வாறான எந்த விடயங்களும் இடம்பெறவில்லை என்பதனை உறுதி செய்துவிட்டு திரும்பி சென்றனர்.
மேலும் நியூஸ்ஹப் அலுவலகத்தை சோதனையிடுவதற்கான தாங்கள் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்து பொலிஸார் காண்பித்த ஆவணத்தில் 12 டிசம்பர் 2018 என்ற திகதி காணப்பட்டது, அந்த ஆவணம் ஒரு வருடத்திற்கு முன்னர் காலாவதியாகிவிட்டது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பிலும் இலங்கை ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் சர்வதேச ஊடகமான அல்ஜசீரா இன்று (06) செய்தி வெளியிட்டிருந்தது.
அல்ஜசீராவின் Charles Stratford இது தொடர்பில் கொழும்பில் இருந்து அறிக்கையிட்டிருந்தார்.
இதேபோன்று TheLeader.lk என்ற செய்தி இணையத்தளத்தின் youtube இற்கு பொறுப்பாகவுள்ள சஞ்சய் தனுஷ்க என்பவர் 26 ம் திகதி சி.ஐ.டியினரால் விசாரணை செய்யப்பட்டதுடன், Voicetube.lk என்ற செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் துசார விதாரன 28 ம் திகதி சி.ஐ.டியினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அவரிடம் 2 மணித்தியாலங்கள் விசாரணை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வாரங்கள் மாத்திரம் கடந்த நிலையில் தேடுதல்கள், விசாரணைகள், அச்சுறுத்தல்களை தாங்கள் எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்ற இலங்கை பத்திரிகையாளர்களின் கரிசனைகளை பகிர்ந்துகொள்வதாக எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு (Reporters Without Borders) தெரிவித்திருந்தது.
0 comments :
Post a Comment