எங்களுக்கு இப்போது மங்குசனி! கூறுகின்றார் சித்தார்த்தன்..
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தற்போது மங்குசனி தொடங்கியுள்ளதாகவும் எதிர்வரும் தேர்தலில் முன்னரைப்போல் 16 ஆசனங்களை பெறமுடியாதுபோனாலும், ஒற்றுமை எனும் தோத்திரத்தை ஓதி தாம் மக்களின் காதில் பூச்சூடுவோம் என்றும் உறுதிபடக்கூறியுள்ளார் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் , தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்தன்.
வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புளொட் அமைப்பின் மத்திய குழு கூடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “ஜனாதிபதி தேர்தல் அதன் பின்னரான பெறுபேறுகள் மற்றும் தற்போதுள்ள நிலைமைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டதுடன் அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடுவற்காகவே எமது மத்தியகுழு இன்று கூடியிருந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு செல்லப் போகின்றோம் என்று என்றுமே நாம் சொன்னதில்லை. இன்றும் அதே நிலைப்பாடே உள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்.
சில வேளைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அதற்குள் இருக்கும் கட்சிகளுக்குமிடையில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அந்த ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டும் என்பதில் நாங்கள் அவதானமாக இருக்கின்றோம்.
எதிர்வரும் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூடவுள்ளது. அப்போது பேசி ஒரு சுமூகமான நிலைப்பாட்டை எடுப்போம் என நாங்கள் நம்புகின்றோம்.
மாற்று அணி ஒன்று உருவாகும் போது அது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாதிக்கச் செய்யும். போட்டிகள் கூடுகின்ற போது கட்டாயமாக பாதிப்பு இருக்கும். அது தொடர்பாக நாங்கள் பேசுகின்றபோது கூடியவரையில் ஒத்த கருத்துள்ள கட்சிகளைக் கூட்ட முடியுமாயின் இன்னும் கூட்டவேண்டும் என்ற அவிப்பிராயமும் இருக்கின்றது.
அது எவ்வளவு சாத்தியமென்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் அந்தப் பிளவு இன்று கூடுதலாகவே இருக்கின்றது. அதனை மீண்டும் ஒற்றுமைப்படுத்துவது சாத்தியமில்லாவிட்டாலும் கூட இரண்டு மூன்று அணிகளாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளது. எனவே மக்களே இனி தீர்மானிக்க வேண்டும்.
எனினும் எங்கள் கட்சியைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான வாக்குவீதமே கூடுதலாக இருக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பே கூடுதலான ஆசனங்களையும் பெறும்.
கடந்த காலங்களைப் போல 16 ஆசனங்களை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் கூட அதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும் என்ற எண்ணப்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்றது.
தற்போதுள்ள கள நிலைவரங்கள் எப்படி சாதக பாதகமாக மாறும் என்று கூற முடியாது விட்டாலும் கூட தேர்தலில் கணிசமான ஆசனங்களை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment