Monday, December 9, 2019

சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடி யில், பயணத்தடையை நீடித்தது நீதிமன்று..

வெள்ளைவேனில் கடத்தப்பட்டு விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் பணியாளர் இலங்கைக்கு எதிரான போலிப்பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். இதன் பொருட்டு அவரை விசாரணை செய்ய அனுமதியளிக்குமாறும் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் விடுத்த வேண்டுதலின் பிரகாரம் ஹானிய பரிஸ்ரர் பிராண்சிஸ் என்ற குறித்த பெண் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்திருந்த நீதிமன்று அவரை 9.12.2019 ம் திகதிக்கு முன்னர் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிட்டிருந்தமை யாவரும் அறிந்த விடயம்.

இதன்பிரகாரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணியளவில் குறித்த பெண் முகத்தை மூடிய வகையில் சீ.ஐ.டி தலைமை திணைக்களத்திற்குள் சென்றுள்ளதுடன் அவரிடம் நீண்ட நேர விசாரணையை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று மீண்டும் ஆஜராகுமாறு பணித்துள்ளனர்.

இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகிய அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன்று பகல் அவர் சட்டவைத்திய அதிகாரி முன்பாக முன்னிலையாகியுள்ளார்.

இந்நிலையில் இன்று குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடை எதிர்வரும் 12ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கடத்தப்பட்டதாக கூறப்படும் குறித்த சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியிடம் நேற்று முதல் வாக்குமூலம் பதிவு செய்யும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது.

மேலும், அவரிடம் இன்றும் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதாக தெரிவித்த அவர்கள், அதற்காக அவரை இன்றைய தினம் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை ஆராயந்த பிரதான நீதவான், குறித்த பெண்ணை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி அவர் தாக்குதலுக்கோ அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கோ முகங்கொடுத்துள்ளாரா என்பது தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும், தற்போது அவர் ஏதேனும் மன அழுத்தத்தில் உள்ளாரா என்பது தொடர்பிலும் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com