Friday, December 27, 2019

ராஜிதவின் நிலைமை மோசமடைகின்றது. வெள்ளைவான் சாராதிகள் அரச சாட்சிகளாக மாறலாம்!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ணவிற்கு விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல்காலத்தில் நாடத்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் மாநாடு தொடர்பாகவே அவர் மீது விசாரணைகள் பாய்ந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளைவான் கடத்தல்களை தாமே மேற்கொண்டதாக இருவர் தெரிவித்திருந்தனர். அவ்விருவருடனும் முன்னாள் அமைச்சர் பிரசன்னமாகியிருந்து அவர்கள்தான் வெள்ளைவான் சாரதிகள் என அறிமுகம் செய்துவைத்திருந்தமை யாவரும் அறிந்தது.

ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து குறித்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டபோது அவர்கள், தமக்கு ராஜித சேனாரட்ண தலா பத்து லட்சம் ரூபாய்களை கொடுத்து அவ்வாறு கூறச்சொன்னதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து ராஜிதவைக் கைது செய்யுமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்தது. முன்னாள் அமைச்சரை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் அவரது கொழும்பு மற்றும் களுத்துறையிலுள்ள இரு வீடுகளையும் சுற்றிவளைத்து தேடுதல் நடாத்தினர். ஆனால் பொலிஸாருக்கு கயிறு கொடுத்து கொழும்பு லங்கா தனியார் வைத்தியசாலையில் படுத்திருந்தார் முன்னாள் அமைச்சர்.

வைத்தியசாலைக்குச் சென்ற சிஐடி யினர் ராஜித விடம் வாக்குமூலம் பெற்றதையடுத்து அங்கு விரைந்த நீதிபதி சந்தேக நபரான ராஜிதவை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், அவர் தற்போது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் தடுப்புகாவலில் உள்ளார்.

இந்நிலையில் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட வெள்ளைவேன் போலிச்சாரதிகள் இருவரும் நீதிமன்றில் விசேட வாக்குமூலமொன்றை வழங்குவதற்கு அனுமதி கோரியுள்ளனர்.

அவ்வாறானதோர் வாக்குமூலத்தை குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தபின்னரே வழங்கமுடியுமென நீதிமன்று தெரிவித்துள்ளது.

அவர்கள் இருவரும் அரச சாட்சியாக மாறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

No comments:

Post a Comment