அநீதிக்கெதிராக குரல்கொடுத்தால் நானாக இருந்தாலும் உன்னை கொல்வேன் என்ற நீதியின் காவலன் இவர்தான்.
வன்செயல் மற்றும் குற்றங்களின் பயத்திலிருந்து விடுபட்டு வாழ்வதற்கான சூழலை பிரஜைகளுக்கு உருவாக்கிக்கொடுப்பதே இலங்கை பொலிஸாரின் நோக்கம் என அத்திணைக்களம் கூறுகின்றது. மேலும் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவும், குற்றங்கள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்கவும் இலங்கை பொலிஸார் கடமைப்பட்டுள்ளதுடன் அக்கருமத்தை தம்மால் மேற்கொள்ள முடியுமென அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அநீதிக்கு எதிராக குரலெழுப்பிய நபர் ஒருவருக்கு இலங்கை பொலிஸ் நிலையத்தினுள் வைத்து உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவமானது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தினுள் வைத்து அப்பொலிஸ் நிலையத்திற்கான „குற்றத் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரி" உப பொலிஸ் பரிசோதகர் யசிந்தன் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :
தன்னை இலங்கை புலனாய்வுத்துறை எனக்காட்டிக்கொள்ளும் பாயிஸ் என்பவனால் வன்னி பிரதேசமெங்கும் காணப்படும் அரச மற்றும் தனியார் காணிகள் மோசடியான முறையில் கையகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. குறித்த நபர் தன்னை அரசியல் பிரபலங்களின் நெருங்கிய நபர் என்றும் புலனாய்வுத் துறையினைச் சேர்ந்தவன் என்றும் காட்டிக்கொள்ளுகின்ற காரணத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அச்சம் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த தினேஸ் என அழைக்கப்படும் இளைஞன், மோசடிக்காரனான பாயிஸ் தொடர்பில் பாதிக்கப்படும் மக்கள் அச்சம் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்றும் அவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மக்களுக்கு விழிப்பூட்டியுள்ளார்.
மேற்படி இளைஞனின் செயற்பாட்டில் ஆத்திரமடைந்த மோசடிக்காரனான பாயிஸ் என்பவன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளான். முறைப்பாட்டின் நிமிர்த்தம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட தினேஸ் குற்றப் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி முன்னிலையில் அச்சுறுத்தப்பட்டுள்ளார். எழுதுதை நிறுத்தாவிட்டால் கைகளை வெட்டி அகற்றுவேன் என்றும் சில சமயங்களில் கழுத்தையே வெட்டி கொலை செய்யவும் முடியுமென்றும் அவன் கூறியுள்ளான்.
பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி முன்னர் அவன் அச்சுறுத்தப்பட்டபோது, பாதிக்கப்பட்டநபர் பொலிஸ் நிலையத்தில் வைத்தே என்னை கொல்வதாக அச்சுறுத்துகின்றான் என பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் யசிந்தனிடம் முறையிட்டபோது, அநாவசியமான நடவடிக்கைகள் மேற்கொண்டால் நானாகவிருந்தாலும் அவ்வாறுதான் செய்வேன் என கொலை அச்சுறுத்தல் விடுப்பவனை உற்சாகப்படுத்துகின்றார் „குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி' உப பொலிஸ் பரிசோதகர் யசிந்தன். மோசடிக்கு எதிராக குரல்கொடுத்தல் „அநாவசியமான செயற்பாடு' என இலங்கை குற்றவியல் கோவையில் எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் அந்த „அநாவசியமான செயற்பாட்டுக்கு தண்டனை கையை வெட்டுதல் அல்லது கழுத்தை வெட்டுதல் என இலங்கை தட்டனைச் சட்டக்கோவையில் எத்தனையாம் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் „ குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி' விளக்கவேண்டுமென இலங்கைநெட் கோருகின்றது.
அத்துடன் கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி யசிந்தன் கொலை அச்சுறுத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளதுடன் குற்றமொன்றை தடுப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, தினேஸ் மீது விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தலுக்கு உடந்தையாக செயற்பட்டார் மற்றும் கடமையை நேர்மையாகவும் வினைத்திறனுடனும் பக்கசார்பற்றும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் உப பொலிஸ் பரிசோதகர் யசிந்தன் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பொலிஸ் தலைமையகத்தை இலங்கைநெட் வேண்டுகின்றது.
கொலை அச்சுறுத்தல் பொலிஸ் நிலைத்தினுள் வைத்து விடுக்கப்படும் மற்றும் அதற்கு உடந்தையாக குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி செயற்படுவதை நிரூபிக்கும் ஒலிப்பதிவு.
0 comments :
Post a Comment