மைத்திரியின் தம்பிக்கும் அடிக்கின்றார் ஆப்பு கோத்தா!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இந்நாட்டில் நல்லாட்சியை கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் அதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்ற அப்பட்டமான குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது.
அவரது ஆட்சியில் 19 திருத்தச் சட்டத்தினூடாக நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றுக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டது. அத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்களை இயங்கு நிலைக்கு கொண்டுவந்து அரச இயந்திரம் சுயாதீனமாக இயங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஊடக சுதந்திரம் உறுதி செய்யப்பட்டது.
இவ்வாறான சில நற்காரியங்கள் இடம்பெற்றபோதும் மைத்திரிபால தனது குடும்ப அங்கத்தவர்களை முக்கியமான அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமித்து பெரும் ஊதியத்தை வழங்கிவந்தார் என்பதும் மறைக்கமுடியாத உண்மையாகும்.
அந்தவகையில் தனது சகோதரன் குமாரசிங்க சிறிசேனவை ஸ்ரீ லங்கா டெலிக்கொம் நிறுவனத்தின் தலைவராக நியமித்தார். குமாரசிங்கவிற்கு மாதமொன்றுக்கு 20 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் தொலைத்தொடர்புடன் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களுடனான உறவு மற்றும் ஒப்பந்தங்கள் ஊடாக அவர் மாதமொன்றுக்கு 20 மில்லியன் ரூபாய்களை உழைத்துவருதாக தகவல்கள் உண்டு.
இந்நிலையில் ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவருக்கான சம்பளத்தை இரண்டரை லட்சம் வரை குறைக்குமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக அறியமுடிகின்றது. அதேநேரம் மைத்திரிபாலவிற்கு அவரது சகோதரனை அப்பதவியிலிருந்து தூக்கமாட்டோம் என மஹிந்த ராஜபக்ச உறுதிமொழி வழங்கியுள்ளதாகவும் அதன் காரணமாக அவரை அப்பதவியிலிருந்து தூக்குவது தொடர்பில் நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிக்க கோத்தபாயவால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள குழுவிற்கு சங்கடமேற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment