ஐ.நா விற்கு அழைத்துச் செல்வதாக கூறி சுவிஸ் பெண்ணிடம் லட்சங்களை ஆட்டையை போட்ட த.தே.கூ உறுப்பினர் சஜீவன்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான மாநாடு வருடத்தில் இருமுறை இடம்பெற்றுவருகின்றது. மனித உரிமைகளுக்கான அமர்வுகள் இடம்பெறும் மார்ச் மற்றும் கார்த்திகை மாதகாலங்கள் விவசாயிகளுக்கு அறுவடை காலம்போல் போலி மனித உரிமைவாதிகள் அல்லது மனித உரிமை வியாபாரிகளுக்கு அதிக பணமீட்டும் காலமாக இனம்காணப்பட்டுள்ளது என இலங்கைநெற் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கின்றது.
தமிழ் மக்களிடமும் பல்வேறுபட்ட அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் (என்ஜீஓ) பணத்தினைபெற்றுக்கொண்டு ஜெனீவாவில் களியாட்டங்களில் ஈடுபடும் இப்போலி முகவர்கள் ஐ.நா அமர்வுகள் இடம்பெறும்காலத்தில், முடிந்தவரை சட்டவிரோத ஆட்கடத்தல்களை மேற்கொள்வதுடன், அதன் பெயரால் மக்கள் பலரும் ஏமாற்றப்படுகின்றனர்.
அதனடிப்படையில் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்க செல்கின்றேன் என ஜெனீவா சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினருமான சஜீவன் சண்முகலிங்கம் என்பவன், வன்னி யுத்தத்தில் தனது கணவன் காணாமலாக்கப்பட்டதாக கூறிக்கொள்ளும் பெண் ஒருவரை மரத்தால் விழுந்தவளை மாடேறிமிதித்த கதையாக ஏமாற்றியுள்ளான்.
முள்ளியவளையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அசோதாம்பிகை என்ற கணவனைத் தேடியலையும் பெண்ணை தான் ஜெனீவாவில் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துகொள்ளச்செல்லும்போது தன்னுடன் அழைத்துச்செல்வதாக சுவிட்சர்லாந்தில் வாழும் சகோதரியிடம் சுமார் 14 லட்சங்களை ஏமாற்றியுள்ளான்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கச் செல்கின்றோம் என தவில் தம்பட்டங்களுடன் செல்லும் ஈனப்பிறவிகள் அதே பாதிக்கப்பட்ட மக்களின் உதிரத்தை எவ்வாறு குடிக்கின்றார்கள் என்பதற்கு இது சிறந்ததோர் உதாரணமாகும். குறித்த பெண்ணுக்காக 14 லட்சம் பணத்தை வழங்கியிருப்பதும் வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் தனது கணவனை இழந்து சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள அகதிச் சகோதரியாகும்.
பணத்தை கொடுத்தபெண் சஜீவனை தொடர்பு கொண்டு விபரம்கோரியபோது, ஜெனீவாவில் மனித உரிமைகள் வியாபாரிகளின் செயற்பாடுகளை இவ்வாறு விபரிக்கின்றான் கஜீபன்.
ஐக்கிய நாடுகள் சபையினுள் பல்வேறு அரச சார்பற்று நிறுவனங்களை பதிவு செய்து கொண்டுள்ள பொஸ்கோ போன்ற நபர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக வீசாவுக்கான ஸ்பொன்சர் கடிதங்களை வழங்குவதற்கு ஆள் ஒருவருக்கு 5000 சுவிஸ் பிராங்குகளை பெற்றுக்கொள்வதாக கூறுகின்றார். அதனடிப்படையில் அவர்களுக்கு தான் 5000 பிராங்குகளை கொடுத்து கடிதத்தை பெற்று வீசாவிற்கு விண்ணப்பித்தபோதும், குறித்தபெண்ணின் பெயர் தடை செய்யப்பட்டுள்ளதால் வீசா கிடைக்காமல் போனதாகவும், தடை பட்டியிலிருந்து பெயரை நீக்குவதற்கு அரசியல் பிரபலங்களால் மாத்திரமே முடியும் என்றும் கூறுகின்றார். அதாவது சஜீபனின் அடுத்தஇலக்கு சுவிட்சர்லாந்து தூதரக வீசாவிற்கான தடைப்பட்டியிலிலிருந்து பெயரை நீங்குவதற்காக அப்பெண்ணிடமிருந்து மேலதிக பணத்தினை பெற்றுக்கொள்வதாகும்.
எது எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிராண்சிலிருந்து சடைமுடியுடன் சென்று மனித உரிமைகள் வியாபாராம் செய்யும் பொஸ்கோ குறித்த பெண்ணிற்கு ஸ்பொன்சர் கடிதம் வழங்குவதற்காக சஜீபனிடம் 5000 சுவிஸ் பிராங்குகளை தான் பெற்றுக்கொள்ளவில்லை என மறுக்கவில்லை. ஐ.நா அமர்வுகளின்போது பெரும் செலவு ஏற்படுவதாக தமிழ் மக்களிடம் பல்வேறு வழிகளில் பணத்தை பெற்றுக்கொள்ளும் இக்கும்பல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய ஆசையூட்டியும் பணத்தை சூறையாடுகின்றது. ஐ.நா விற்கு சென்று அங்கிருந்து வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு மக்கள் மத்தியில் மனித உரிமை ஆர்வலர்களாக தங்களை காண்பித்துக்கொள்ளும் இவர்களின் பின்னணியில் ஆட்கடத்தல் போன்ற சட்டவிரோத வியாபாரங்களே உள்ளதென்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகியுள்ளது.
பொஸ்கோவிற்கு வழங்குவதற்காக என சுவிட்சர்லாந்தில் வசிக்கும் பெண்ணிடம் கஜீபன் பணத்தை பெற்றுக்கொண்டதனை ஏற்றுக்கொள்ளும் தொலைபேசி உரையாடல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. (அதன் இணைப்பு கீழே)
மேலும் காணாமலாக்கப்பட்டோருக்கு ஆதரவான சுலோகத்துடன் தெருத்தெருவாக அலையும் படத்தில்காணப்படும் அயோக்கியன்தான் காணாமலாக்கப்பட்டதாக கூறப்படும் நபரொருவரின் மனைவியையே ஏமாற்றியுள்ளான். மேலும் அம்புலன்ஸ் ஒன்றை வாங்குவதற்கென நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட நிதியை இவன் சிறிதரனுடன் இணைந்து மோசடி செய்தமை மற்றும் மேற்படி பெண்ணின் காணிப்பிணக்கு ஒன்று சம்பந்தமாக இரண்டரை லட்சங்களை மோசடி செய்தமை என பல்வேறு மோசடிகள் தொடர்பாக இலங்கைநெட் அறிந்து கொண்டுள்ளது. இவை தொடர்பான விபரமான தகவல்கள் எதிர்வரும் நாட்களில் பகிரங்கப்படுத்தப்படும்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் எனும் பெயரால் புலம்பெயர் தமிழர் மேற்கொள்ளும் பல்வேறு தில்லுமுல்லுகளும் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
0 comments :
Post a Comment