முஷாரப்பின் உடலை பொது இடத்தில் 3 நாட்கள் தொங்கவிட வேண்டும்: நீதிமன்ற உத்தரவு
தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷாரப் இறந்துவிட்டால், அவரது உடலை இழுத்துவந்து சென்டிரல் சதுக்கத்தில் 3 நாட்களுக்கு தொங்கவிட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு முழு விபரத்தில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இராணுவ தளபதியாக இருந்த முஷாரப் 2001ஆம் ஆண்டு இராணுவ புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி அந்நாட்டின் ஜனாதிபதியானார். 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி நெருக்கடி நிலையை அறிவித்தார். டிசம்பர் 15ஆம் திகதி வரை நெருக்கடி நிலை அமுலில் இருந்தது.
2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றதும், தனது ஆட்சியை புரட்சி மூலம் கைப்பற்றியதற்காகவும், நெருக்கடி நிலையை கொண்டு வந்ததற்காகவும் முஷாரப் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தார்.
2016ஆம் ஆண்டு சிகிச்சைக்காக துபாய் சென்ற முஷாரப் பின்னர் நாடு திரும்பவில்லை. விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் துபாயில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இஸ்லாமாபாத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தேச துரோக வழக்கை விசாரித்து வந்தது. கடந்த 17ஆம் திகதி சிறப்பு நீதிமன்றத்தில் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2 நீதிபதிகள் இந்த தீர்ப்பையும், ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்தையும் தெரிவித்து இருந்தனர்.
தீர்ப்பு முழு விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர். அதன்படி நேற்று அமர்வுக்கு தலைமையேற்றுள்ள பெஷாவர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வகார் அகமத் சேத் தீர்ப்பு முழு விபரத்தை வெளியிட்டார். 167 பக்கங்கள் கொண்ட அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாங்கள் அவர் குற்றவாளி என தெளிவாக உணர்ந்துள்ளோம். எனவே தண்டனை விதிக்கப்பட்ட அவரது கழுத்தில் தூக்கிட்டு இறக்கும் வரை தொங்கவிட வேண்டும்.
வெளிநாட்டு தப்பிச்சென்ற தண்டனை பெற்றவரை கைது செய்ய தங்களால் முடிந்த அளவு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கு உத்தரவிடுகிறோம். அதோடு, சட்டப்படி அவரை தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
ஒருவேளை தூக்கிலிடப்படும் முன்பே அவர் இறந்துவிட்டால், அவரது உடலை இஸ்லாமாபாத்தில் உள்ள டிசவுக் (சென்டிரல் சதுக்கம்) பகுதிக்கு இழுத்துவந்து 3 நாட்களுக்கு தொங்கவிட வேண்டும்.
0 comments :
Post a Comment