Tuesday, December 17, 2019

மகாநாயக்கர்கள் உட்பட 11 தேரர்கள் ரணிலுக்கு அதிர்ச்சிக் கடிதம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை சிங்கள பௌத்த தலைவர்களில் ஒருவராக உள்ள சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இப்போதாவது வழங்கி சிங்கள பௌத்த உரிமைகளையும், அதன் இருப்புக்களையும் உறுதிசெய்யுமாறு மல்வத்துப்பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் மற்றும் அஸ்கிரியப் பீடத்தின் மகாநாயக்கர் வறக்காகொட தம்மசித்தி ஸ்ரீ ஞானரத்தன தேரர் இணைந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.

அரசியல் புலமை, பழம்பெரும் தலைவர் மற்றும் சர்வதேசம் ஏற்றுக்கொள்கின்ற தலைவர் என்கிற வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட ஆலோசகராகவும், வழிநடத்துபவராகவும் தொடர்ந்தும் செயலாற்றுமாறும், தற்போது காலம் கனிந்திருக்கின்ற படியினால் புதிய தலைமைத்துவத்திற்கு வழிகொடுக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமென மகாநாயக்க தேரர்கள், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த டிசம்பர் 03ஆம் திகதி மல்வத்துப்பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் மற்றும் அஸ்கிரியப் பீடத்தின் மகாநாயக்கர் வறக்காகொட தம்மசித்தி ஸ்ரீ ஞானரத்தன தேரர் ஆகியோரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண் சந்தர்ப்பத்தில் இதனை தெரிவித்துள்ளனர்.

மேற்படி மகாநாயக்க தேரர்களின் விசேட அழைப்பிற்கிணங்க முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்திப்பதற்கு சென்ற நிலையில், நேருக்குநேர் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் ஊடகங்களுக்கோ வேறு நபர்களுக்கோ வெளியிடப்படாத நிலையில் இரகசியமாக பேசப்பட்டுள்ளன.

மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகள், போதனைகளை நன்கு அவதானித்து ஏற்றுக்கொண்ட முன்னாள் பிரதமர் ரணில், ஐக்கிய தேசியக் கட்சியை மிகவிரைவில் வெற்றிப்பாதைக்கு வழிநடத்திவிட்டு தாம் விரைவாக ஓய்வுபெறவுள்ளதாகவும், தலைமைத்துவத்தை தொடர்ந்து தன்வசம் தக்கவைப்பதற்கான நோக்கம் தனக்கு இல்லை என்பதையும் மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பின்போது கூறியுள்ளார்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி இழந்துள்ள சிங்கள பௌத்த மக்களின் வாக்குகள், பௌத்த உரிமைகள், ஒழுக்கம், முக்கியத்துவம் மற்றும் அபிமானத்துவம் என்பவற்றை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கட்சியின் தலைமைத்துவத்தை கொடுப்பதன் ஊடாக மீள் உறுதிசெய்துகொள்ள முடியும் என்கிற ஆலோசனையை அஸ்கிரிய மகா விகாரையின் சிரேஷ்ட சங்கசபையின் உறுப்பினரான மக்குரப்பே ரத்தனபால ரத்தனஜோதி தேரர் மற்றும் துணை மகாநாயக்கர் உட்பட 11 பௌத்த தேரர்கள் இணைந்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.

அதற்கமைய எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ, சபாநாயகர் கரு ஜயசூரியவின் வழிநடத்தலிலான தலைமைத்துவமானது சிங்கள பௌத்த உரிமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ள மகாநாயக்க தேரர்கள், ரணில் விக்கிரமசிங்கவின் சேவையானது நாட்டிற்கும், கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்ந்தும் அவசியமாகும் என்பதையும் கூறியுள்ளனர்.

இந்த ஆலோசனைகள் அடங்கிய விசேட கடிதமொன்றை அஸ்கிரிய மகா விகாரையின் சிரேஷ்ட சங்கசபையின் உறுப்பினரான மக்குரப்பே ரத்தனபால ரத்தனஜோதி தேரர் மற்றும் துணை மகாநாயக்கர் உட்பட 11 பௌத்த தேரர்கள் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com