ஈஸ்டர் தாக்குதல்: 10 பொலிஸ் அதிகாரிகள் மீது பாய்கிறது விசாரணை!
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு விளக்கமறியல் எதிர்வரும் 17ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 10 பொலிஸ் அதிகாரிகள் மீது விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21ஆம் திகதி ஸ்ரீலங்காவிலுள்ள பிரதான தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 250க்கும் அதிகமான அப்பாவி மக்கள் பலியானதுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் வெளிநாட்டு உளவுப் பிரிவுகளினால் ஏற்கனவே இந்த தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் தகுந்த தடுப்புநடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர்கள் இன்றுவரை விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர்.
ஏற்கனவே பிணைகோரி மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த போதிலும், அதற்கெதிராக சட்டமா அதிபர் திணைக்களம் மனுத்தாக்கல் செய்ததினால் பிணை கோரிக்கை கடந்த ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி நிராகரிக்கப்பட்டிருந்தது.
குற்றவியல் சட்டக்கோவையின் 296ஆவது பிரிவின் கீழ் இவர்கள் குற்றமிழைத்திருப்பதாக மேல் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நிலையிலேயே இன்றைய தினம் முற்பகல் குறித்த இருவரும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வழக்கு விசாரணையின்போது மேலும் 10 சந்தேக நபர்களாக அடையாளங்காணப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணை செய்யவேண்டியுள்ளதால் சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் தொடர்ந்து வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றில் கோரியது.
அதற்கமைய அவர்களை டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment