Wednesday, November 6, 2019

சந்திரிக்கா செல்லாக்காசாம்! கூறுபவர் SB திஸாநாயக்க.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது ஜன பெருமுனவுடன் இணைந்து கொண்டுள்ள நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை காப்போம் என்ற கோஷத்துடன் கட்சியின் மூத்த உறுப்பினர்களான குமார் வெல்கம , அதாவுட செனவிரத்தின போன்றோரது தலைமையில் குழுவொன்று செயற்பட்டு வருகின்றது.

இக்குழுவானது நேற்று ஒன்றுகூடல் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க தலைமையில் மேற்கொண்டு தமது கட்சியை எவ்வாறு காக்கவேண்டும் என ஆதரவாளர்களுக்கு விளக்கியதுடன், கோத்தபாய ராஜபக்ச வெற்றியடைந்தால் , சிறிலங்கா சுதந்திரக் கட்சி அடியோடு அழிந்துவிடும் எனவும் கட்சி தப்பிப்பிழைக்க வேண்டுமாகவிருந்தால் சஜித் பிறேமதாஸ வெற்றியடையவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு செல்லாக்காசு என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அட்டன் பிரதேசத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அனைத்து சந்தர்ப்பத்திலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிராகவே செயற்பட்டார்.

அவரின் தாய் சுதந்திர கட்சியின் தலைவராக செயற்பட்ட போது, அவரது கணவரான விஜய குமாரதுங்க, கட்சியின் பொதுச் செயலாளர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் டி.பி.இலங்கரத்ன ஆகியவர்களுடன் கட்சியில் இருந்து விலகி இலங்கை மக்கள் கட்சியினை உருவாக்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சந்திரிக்கா அம்மையார் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், அவரது தாயாரான சிறிமாவோ பண்டாரநாயக்க, அவரது சகோதரரான அனுர பண்டாரநாயக்க மற்றும் அவரது சகோதரியான சுனேத்ரா பண்டாரநாயக்க ஆகியோரை எதிரியாக பார்த்தவர். சந்திரிக்கா அவர்கள் ஜனாதிபதியாக ஆகுவதற்கு முன்பாக அவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்து உறுப்பினர்களும் அவருக்கு எதிராகவே அன்று செயற்பட்டனர்.

அவரை ஆதரித்து கட்சிக்குள் இணைத்து கொள்ள வேண்டும் என பாடுபட்டவர்களில் நானும் மங்கள சமரவீரவும் அடங்குவர்.

இவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் இணைத்து இவருக்கு பதவிகளை வழங்க வேண்டும் என நுவரெலியாவில் இரண்டு நாட்கள் சந்திப்புகளும் என்னால் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்த சந்திப்பு வருகை தர கோரிய முக்கிய உறுப்பினர்கள் கூட வருகை தராது. இவரை புறக்கணித்தனர்.

இந்த நிலையில் அத்துலத் முதலியின் மறைவை அடுத்து அத்தனகல பிரதேச அமைப்பாளராக சந்திரிக்காவை நியமனம் படுத்த நாம் திட்டமிட்டோம். அதன் பின்னர் தென் மாகாண சபை தேர்தலுக்கு இவரை முன்னிலைப்படுத்தி இவரை வெற்றியீட்ட வைத்தோம். பின் படிப்படியாக அவரை முன்னேற்றி ஜனாதிபதியாகவும் ஆக்கினோம்.

ஆனால் இவரை கட்சிக்குள் இணைத்து கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் அவரின் வாக்கு பெட்டியில் அவருக்கு ஆதரவாக 11 வாக்குகளே இருந்தது.

இவ்வாறாக அனைவராலும் வெறுக்கப்பட்ட சந்திரிக்கா ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது ஒரு பெரிய விடயமாக கருத முடியாது. அவரை கணக்கில் எடுக்கவும் போவதில்லை. காரணம்

அன்று முதல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட மாற்று கட்சியினருக்கு இவர் தனது ஆதரவை வழங்கி வந்துள்ளார் என தெரிவித்த எஸ்.பீ.திசாநாயக்க இம்முறை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச அதிகபடியான வாக்குகளால் வெற்றியீட்டுவார்.

ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்களுக்காக இ.தொ.கா ஊடாக பல்வேறு அபிவிருத்திகளை செய்துள்ளமை எமக்கு தெரியும். அதேநேரத்தில் அமைச்சர் திகாம்பரம் மலையக மக்களுக்கு எதை கொண்டு வந்து திணித்துள்ளார் என்பது எமக்கு தெரியும்.

அந்த வகையில் அபிவிருத்திகளை முன்னெடுத்து சென்ற இ.தொ.காவை விட மலையகத்திற்கு குடு, கேரளா கஞ்சா என கொண்டு வந்து கொடுப்பவர்கள் யார் என்றும் இம்மக்களுக்கு தெரியும்.

கடந்த உள்ளுராட்சி தேர்தலில் பொது பெரமுன நுவரெலியா மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெற்ற வாக்குகளுடன் கூட்டும் பொழுது ஐக்கிய தேசிய கட்சியை விட இரண்டு மடங்குகளான வாக்குகளை பெற்றுள்ளது. ஆகையால் இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் இ.தொ.கா ஆகியோர் பெறும் வாக்குகளுடன் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெறுவார் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com