Tuesday, November 5, 2019

MCC ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த பிக்கு உண்ணாவிரதப்போராட்டம்..

அமெரிக்க நிறுவனமான மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் (Millennium Challenge Corporation - MCC) உடன் செய்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வணக்கத்துக்குரிய உடுதும்பர காஷ்யப்ப தேரர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை இன்று (05) ஆரம்பித்துள்ளார்.

குறித்த உண்ணா விரதப்போராட்டம் சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியுள்ளது. பௌத்த தர்மத்தை இந்நாட்டில் நிலைநிறுத்தும் பொருட்டு பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் மேற்படி தேரர், நாட்டை வெளிநாட்டு சக்திகளிடம் அடகுவைக்கின்ற குறித்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அவ்வொப்பந்தத்தை கைவிடுவதாக நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமரிடமிருந்து எழுத்துமூலமான உறுதிமொழி கிடைக்கும்வரை தனது போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு அமெரிக்க இராணுவம் இந்நாட்டினுள் நுழையுமாகவிருந்தால் அவர்கள் எமது உடலங்களின் மீதே செல்லவேண்டிவரும் என உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ள பிக்குகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இவ்வொப்பந்தத்திற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் அந்த அமைச்சரவையின் அங்கத்தினரான சஜித் பிறேமதாஸவே இன்று இந்நாட்டின் ஜனாதிபதியாக போட்டியிடுவதாகவும் குறிப்பிடும் அவர்கள், ஒப்பந்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டை சஜித் பிறேமதாஸ மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.





No comments:

Post a Comment