கோட்டாவின் அடுத்த அதிரடி.. அரச நிறுவனங்களின் பிரதானிகளை நியமிப்பதற்கு சிறப்புக்குழு..
இலங்கையின் அரச நிறுவனங்களின் பிரதானிகளாக அமைச்சர்கள் மற்றும் அரசியல் பலம்பொருந்தியோரது சொந்த பந்தங்களும் நெருக்கமானோரும் நியமிக்கப்பட்டுவந்தமையை நாம் வரலாற்றினூடாக கண்டுவந்திருக்கின்றோம். குறிப்பாக மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் குடும்ப ஆட்சியே நடைபெற்றதாக பெரும் குற்றச்சாட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க அரசின் நிறுவனங்களுக்கான பிரதானிகளை நியமிப்பதற்கான குழுவொன்றை நியமித்துள்ளார். இக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளராகவிருந்த லலித் வீரதுங்க, பேராசிரியர் நாலக கொடகேவா, சுசந்த ரத்நாயக்க மற்றும் டயஸ் கோமஸ் ஆகியோர் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் சுயாதீனமாக செயற்படுவர் என்பதுடன் நியமனங்கள் வழங்கும்போது யாவருக்கும் பொதுவான நடைமுறை ஒன்றை கடைப்பிடிக்க பணிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் எவ்வித அரசியல் சிபார்சுகளுக்கும் அழுத்தங்களுக்கும் அடிபணியாது நிறுவனங்களின் பிரதானிகளாக பொருத்தமானவர்களை அவர்களின் தகமைகளின் அடிப்படையில் நியமிப்பர். இந்நியமனங்களுடாக நிறுவனங்கள் அரசியல் கட்சிகளின் நலனிலும் பார்க்க நாட்டின் சட்டம் ஒழுங்கின் நலன் பேணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment