எவ்வித நிபந்தனைகளுமின்றியே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குகின்றோம். சுமந்திரன் இறுமாப்பு..
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக தமிழரசுக் கட்சி நேற்று அறிவித்திருந்தது. இது தொடர்பாக அரசியல்வெளியில் பல்வேறு கோணங்களில் தமிழரசுக் கட்சி விமர்சனங்களுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாம் எவ்வித நிபந்தனைகளுமின்றியே ஆதரவினை வழங்க முடிவுசெய்துள்ளதாக அக்கட்சியின் சர்வ வல்லமை பொருந்திய பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதற்காக வழங்கிய ஆதரவுக்காக தமிழ் மக்கள் எதைப்பெற்றுக்கொண்டார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கப்படாத நிலையிலேயே சுமந்திரன் இவ்வாறு இறுமாப்புடன் பதலளித்துள்ளார்.
தேர்தல்களில் கூட்டு சேர்கின்றவர்கள் அல்லது கூட்டுக்கு வெளியேயிருந்து ஆதரவுவழங்குகின்றவர்கள் நிச்சயமாக நிபந்தனைகளுடனேயே ஆதரவினை வழங்குவது வழமையாகும். குறிப்பாக நிறைவேற்றப்படவேண்டிய தேவைகள் பலவற்றை சுமந்து நிற்கின்ற சமூகமாக தமிழ் சமூகம் இருக்கையில் அச்சமூகம் தமது வாக்குகளின் வலிமையை இச்சந்தர்ப்பத்தில் பயன்படுத்தவேண்டும் என்பதே பரவலான எதிர்பார்ப்பாகவுள்ளபோதும் தமிழ் மக்களின் அரசியல்தரகர்கள் தமது சுகபோகங்களுக்காக எவ்வித நிபந்தனைகளுமின்றி ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளமை மக்களை அடிமாட்டுவிலைக்கு விற்பன செய்யும் செயற்பாடாக நோக்கப்படுகின்றது..
சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் இத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுத்தருவோம் என்று கூறிவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று நிபந்தனைகள் இன்றி ஒரு கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வந்திருக்கின்றது என்றால், தமிழ் மக்களுக்கு இலங்கையில் எந்த பிரச்சினைகளும் இல்லை அதன் தீர்வை நிபந்தனையாக வைப்பதற்கு என்று எடுத்துக்கொள்ளலாமா?
0 comments :
Post a Comment