Tuesday, November 12, 2019

பிரபாகரனுக்கு 42 கடிதங்கள் எழுதியிருக்கின்றேன். போட்டுடைக்கின்றார் சந்திரிகா அம்மையார்

நாங்கள் எப்போதும் அப்பாவித் தமிழ்மக்கள் பக்கமே சாய்ந்திருந்தோம்... எல்.ரீ.ரீ.ஈ யினர் ஒருபக்கம் இருக்கின்றார்கள்.. அப்பாவித் தமிழ் மக்கள் இன்னொரு பக்கம் இருக்கிறார்கள். அப்பாவித் தமிழர்களை நாங்கள் ஒருபாேதும் எல்.ரீ.ரீ.ஈயினருடன் ஒன்றுசேர்த்துப் பார்க்கவில்லை... அதனால்தான் எல்.ரீ.ரீ.ஈயினர் யுத்தத்தை விரும்பிய போதெல்லாம் நாம் சமாதானத்தின் பக்கமே அவர்களை அழைத்தோம்.

அவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குக் காலால் அடித்துவிட்டு, யுத்தம் செய்வதே ஒரே நோக்கு என்றார்கள்.. அரசாங்கம் என்ற வகையில் யுத்தம் செய்ய வருபவர்களுடன் நாங்கள் யுத்தம் செய்துதான் ஆக வேண்டும். அதுதான் அரசாங்கம் ஒன்றின் செயற்பாட இருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க, இன்று (12) ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,

இயலுமானவரை நான் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடாத்தி, அப்பாவித் தமிழ் மக்களுக்கு எந்தவொரு அநீதியும் நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு மேலிடங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினேன். இயலுமானவரை இழப்புக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொண்டேன். சிலநேரம் யுத்தம் ஏற்படும்போது அவ்வாறு சொன்னபோதும் அதற்கு நேர் எதிராக நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவும் செய்கின்றது.

நான் ஜனாதிபதியாகி சில மாதங்கள் சென்றதன் பின்னர், தொடர்ந்து எட்டு மாதங்கள் எல்.ரீ.ரீ.ஈயுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தி வந்தோம். என்றாலும் எட்டு மாதங்களின் பின்னர் அவர்கள் மீண்டும் யுத்தத்திற்குத் தயாரானார்கள். அவ்வாறு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போதும், நான் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனுக்கு 42 கடிதங்கள் அவ்வப்போது எழுதினேன். எங்களுக்குள் கடிதப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. அவை என்னிடம் பத்திரமாக இருக்கின்றன. அவற்றை வெளிச்சத்திற்குக் கொணரவுள்ளேன்.

அந்தக் கடிதங்களில் நான், ' உங்களுக்கு யுத்தம் செய்ய வேண்டுமென்றால் யுத்தம் செய்யுங்கள்... அவ்வாறு நீங்கள் யுத்தம் செய்தால் நாங்களும் உங்களுக்கு எதிராக யுத்தம் செய்வோம்... என்றாலும் அப்பாவித் தமிழ் மக்களை நினைத்துப் பாருங்கள்.. - அவர்களது அனைத்து உடைமைகளும் நாசமாகியுள்ளன.... மீண்டும் அபிவிருத்தி நடவடிக்ைககளை நாங்கள் மேற்கொள்வதற்கு நீங்கள் விரும்புகின்றீர்களா? எனக் கேட்டேன்.

நாங்கள் எங்கள் அதிகாரிகளை அங்கு அனுப்பி, உங்கள் கருத்துக்களை அறிந்து உங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வடக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆவன செய்யட்டுமா எனக் கேட்டோம்...அதற்கு பிரபாகரன் ஒரே பேச்சில், ' நாங்கள் அதற்குத் தயாராக இல்லை.. நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை... என்ன செய்வதென்றாலும் இங்கு நான்தான் செய்வேன்' என்றார். எனவும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com