நிஸாந்த டி சில்வா மற்றும் தூதரகப் பெண் விவகாரம், சுவிஸ் - இலங்கை உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் யாரும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று நிகழ்ந்திருந்தது. குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரியான நிஸாந்த டி சில்வா தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டு வெளியேறினார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பல்வேறு கொலைகள் மற்றும் நிதிமோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த பிரதான பொலிஸ் அதிகாரியின் வெளியேற்றம் தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி கூட தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
அவ்வாறு அந்த அதிகாரி வெளியேறிய விடயம் தொடர்பாக சிங்கள ஆங்கில ஊடகங்கள் பல்வேறு விதமான ஊகங்களை வெளியிட்டிருந்தது. குறிப்பாக நிஸாந்த த சில்வா தான் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பான பல மூலப்பிரதிகளை சுவிட்சர்லாந்துக்கு எடுத்துச் சென்றுவிட்டதாகவும் , இலங்கையை சர்வதேச சமூகத்தின் முன்நிலையில் அவமானப்படுத்தலாம் என்ற கோணத்திலும் கட்டுரைகள் வரையப்பட்டதுடன் மக்களையும் குழப்பத்திற்குள் தள்ளியது.
மறுபுறும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக பெண் ஊழியர் ஒருவர் கொழும்பு வீதியில் வைத்து கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக பதிவாகின. இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவ்வாறான சம்பவம் ஒன்று நிகழ்ந்தமை உறுதி செய்யப்பட்டதுடன் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக இன்று கருத்து வெளியிட்ட பிரதமர் தமக்கு இவ்விடயத்தில் சுவிட்சர்லாந்து தூதரகம் ஒத்துழைப்பை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
பிரதமரின் குற்றச்சாட்டை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் முற்றாக நிராகரித்துள்ளதுடன் , தாம் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவே கூறியுள்ளது.
அதேபோல் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி மற்றும் அவரது குடும்ப அங்கத்தவர்கள் விவகாரத்திலும் கரிசனை கொள்வதாக கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் தற்போதைய உடல்நிலையானது, விசாரணைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகரான நிஷாந்த டி சில்வா தனது குடும்பத்துடன் சுவிட்ஸர்லாந்துக்கு அடைக்கலம் கோரி சென்றபின்னர் இலங்கை அரசு அவரை நாடுகடத்துமாறு விடுத்த கோரிக்கையை சுவிட்சர்லாந்து நிராகரித்துள்ளதாக செய்திகள் பரவியுள்ளதாகவும், ஆனால் தமக்கு அவ்வாறான எந்தவொரு கோரிக்கையும் இலங்கை அரசிடமிருந்து உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெறவில்லை என சுவிஸ் தூதரகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
கடத்தப்பட்டதாக கூறப்படும் அப்பெண்ணை கடத்தல்காரர்கள் எனக்கூறிப்பிடுவோர் பலவந்தமாக தெருவில் தடுத்து வைத்திருந்ததாகவும் அவரது விருப்புக்கு எதிராக வாகனம் ஒன்றில் ஏற்றி அவரிடம் தூதரக செயற்பாடுகள் தொடர்பாக தகவல்களை கோரி விசாரணை மேற்கொண்டதாகவும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எது எவ்வாறாக இருந்தபோது குறித்த பெண்ணிடம் நிஸாந்த சில்வா எவ்வாறு வீசாவை பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பாகவே வினவப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக சுவிட்சர்லாந்து இலங்கை அரசிடம் முறையிட்டுள்ளதுடன் பூரண விசாரணை ஒன்றை கோரி நிற்கின்றது. அவ்விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படாதுவிடின் அது நிச்சயமாக சுவிட்சர்லாந்து-இலங்கை இராஜதந்திர உறவில் ஒரு கறுப்பு புள்ளியை உருவாக்கும் என்பதில் சந்தேகங்கள் இல்லை..
0 comments :
Post a Comment