ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமிழ்க் கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளை எப்போதும் வழங்கமுடியாது என்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உட்பட தென்னிலங்கை அரசியல் தலைவர்களின் பெருமதிப்பிற்குரியவரான எல்லே குணவங்ச தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாத்திரமே தாயகப் பிரதேசம் என்று அந்த கோரிக்கைகளில் கூறப்பட்டதை வன்மையாகக் கண்டித்த எல்லே குணவங்ச தேரர், ஒட்டுமொத்த இலங்கை நாட்டையும் ஏன் தாயகப் பிரதேசம் என்று அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இனப்பிரச்சினைக்கான சமஸ்டி தீர்வு, புதிய அரசியலமைப்பு உட்பட தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வாக 13 அம்சக் கோரிக்கைகளை கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் 05 தமிழ்க் கட்சிகள் முன்வைத்தன.
எனினும் இந்த யோசனைகள் அனைத்தும் நாட்டைப் பிரிப்பதற்காகவே இருப்பதாகக் கூறிய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவற்றை பகிரங்கமாகவே நிராகரித்திருந்தார்.
அதேபோல ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவும் மறைமுகமாக இந்தக் கோரிக்கைகளை நிராகரித்திருந்த போதிலும் அவருக்கே தமது நிபந்தனையற்ற ஆதரவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தது.
இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவையில் ஊடகத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பந்துல குணவர்தன, ஊடகத்துறை அமைச்சில் சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் இன்றைய தினம் தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் விருந்தினர்களில் ஒருவராக அழைக்கப்பட்டிருந்த கொழும்பு எல்லே குணவங்ச தேரர், அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு ஆசியுரை நிகழ்த்தினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், தேர்தல் காலத்தில் தமிழ்க் கட்சிகளினால் வெளியிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை எவ்வகையிலும் வழங்கமுடியாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment