குற்றப்புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபயசேகர, புதிய அரசாங்கம் அரசினை பாரமெடுத்த மறுகணமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஷாணி அபயசேகர இலங்கையின் குற்றப்புலனாய்வு வரலாற்றில் பதிவாகியுள்ள சிறந்ததோர் துப்பறியும் நிபுணன்.
இலங்கையில் இடம்பெற்ற மர்மமான குற்றங்கள் பலவற்றின் மர்மங்களைத்துலக்கிய அபார கெட்டிக்காரன் என்பது யாவரும் அறிந்த விடயம். மனித உரிமைகள் விடயத்தில் மிகவும் கவனம் செலுத்தும் பொலிஸ் அதிகாரியாக குற்றங்கள் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு எக்காலத்திலும் தயங்கியதில்லை.
மஹிந்த ராஜபக்ச அரசின் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்ட பல்வேறு கொலைச்சம்பவங்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான புலன்விசாரணைகளின் பிரதானியாகவும் அவர் செயற்பட்டுவந்ததும், ஷானி அபயசேகர ஐக்கிய தேசியக் கட்சியின் ஏவலாளி என மஹிந்த தரப்பினர் குற்றஞ்சுமத்தி வந்தது யாவரும் அறிந்தது. கடந்த ஆட்சிக்காலத்தின்போது அரசியல் நோக்கம் கொண்ட பல்வேறு வழக்குகளுக்கு அவர் முன்னுரிமை வழங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது காணப்படுகின்றது.
இந்நிலையில் ஷானி அபயசேகரவின் இடமாற்றம் அரசியல்பழிவாங்கல் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் இவ்விடயத்தில் எதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் இத்தனை அழுத்தத்தை கொடுக்கின்றார்? சுயாதீன பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவிற்கு என்ன நடந்து விட்டது? பிரதான ஐக்கிய தேசியக் கட்சி எங்கு சென்றுவிட்டது? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தவறு ஒன்று நடக்கின்றபோது, அதுவும் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த ஒருவருக்கு அந்த அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது எனக்கருதப்படுகின்றபோது குரல் எழுப்புவது பாராட்டத்தக்கதும் சிறந்த நல்லுதாரணமும்கூட. ஆனால் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக கேள்வி எழுப்புவதற்கான தார்மீக உரிமை சுமந்திரனிடமுண்டா என்பதே இங்கே இலங்கைநெற் எழுப்புகின்ற கேள்வியாகும்.
நல்லாட்சி என்ற பெயரில் தமிழ் மக்களின் வாக்குகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசொன்றை இயக்கியது. அதன் நிழல் பிரதமராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே வடகிழக்கில் செயற்பட்டார் என்பது பொதுவான குற்றச்சாட்டு. அவ்வாறு செயற்பட்ட அவர் குறித்த ஐந்தாண்டு காலப்பகுதியில் மேற்கொண்ட அரசியல் பழிவாங்கல்கள் பட்டியலில் அடங்காதவை.
வடகிழக்கெங்கும் அரச அலுவலகங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கம் , அரச இயந்திரத்தையே முடக்கியது என்று சொல்லுமளவுக்கு நிலைமைகள் காணப்பட்டது. பல அரச ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பல்வேறு கதிரைகளில் தகுதியற்ற தமது ஏவலாளிகள் அமர்த்தப்பட்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பழிவாங்கல்களுக்கான சிறந்த உதாரணம் ஒன்றை இங்கு சுட்டிக்காட்டுகின்றோம். 2015 இல் மைத்திரி அரசாங்கம் கையேற்றவுடன் கிழக்கு பல்கலைக் கழகத்தின் துணவேந்தராக செயற்பட்ட பேராசிரியர் கோபிந்தராஜா இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த கால நீடிப்பை ரத்து செய்வதற்காக சுமந்திரன் மிகுந்த சிரமம் எடுத்தாக அறியமுடிகின்றது. அவரது காலநீடிப்பு ரத்துச் செய்யப்பட்ட தருணத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்டிருந்த பல்வேறு பணிகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அதனால் கிழக்குப் பல்கலைக்கழகம் பல இழப்புக்களைச் சந்தித்ததாகவும் அத்தருணத்தின் மாணவர்கள் கொந்தளித்திருந்தனர். ஆனால் மாணவர்களின் கொந்தளிப்பினையும் கருத்தில் கொள்ளாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களது அரசியல் பழிவாங்கலை மேற்கொண்டிருந்தது.
தமது அரசியல் தேவைகளுக்காக பல்கலைக்கழக நிர்வாகங்களிலேயே கைவைத்து தமிழ் புத்திஜீவிகளையே நாட்டைவிட்டு விரட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சிஐடி இயக்குனருக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதன் மர்மம் தேடியறியப்படவேண்டியதாகும்..
No comments:
Post a Comment