மன்னர் ஆட்சிக்கு பெயர்போன பௌத்தர்களின் புனித பூமியாக கருதப்படும் அநுராதபுரம் ருவன்வெலி மகாசாய பௌத்த விஹாரை வளாகத்தில், இன்று முற்பகல் 11.48 மணிக்கு நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்துக்கொண்டார்.
இதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரமே நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். இந்த வெற்றியில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களும் பங்குதாரர்களாக வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன்.ஆனால் நினைத்தது போன்று எமக்கு அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. எனினும் நாட்டின் ஜனாதிபதியாக முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகின்றேன்.
நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும்.
மேலும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த விடயங்கள் உட்பட தேர்தல் வாக்குறுதிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றுவேன்.
எனது வெற்றிக்காக கடுமையாக உழைத்த எதிர்க் கட்சித் தலைவரும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்பதுதோடு அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் கட்சியை உருவாக்கி இந்நிலைக்கு கொண்டுசென்ற கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
எனது வெற்றிக்காக கைகோர்த்த அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் என அனைவருக்கு நன்றியை கூறிக்கொள்கின்றேன்.
நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் நான் பாதுகாப்பேன். பயங்கரவாதம், தீவிரவாதத்துக்கு எனது ஆட்சியில் இடமில்லை.
பாதுகாப்பு அமைச்சராக நானே செயற்படுவேன். நிறைவேற்று அதிகாரத்தை சரியாக பயன்படுத்துவேன்.
எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு ஊழல் மோசடி குற்றச் செயல்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், போதைப்பொருள் கடத்தல்கள், பாதாள குழுக்களின் செயற்பாடுகள் எதுவும் இடம்பெற இடமளிக்கமாட்டேன்.
நான் எனது நாட்டை அன்பு செய்கின்றேன். அதனால் எனது ஆட்சியின் எந்தவொரு ஊழல் மோசடிகளும் இடம்பெறாது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தமிழ், முஸ்லிம், மஹிந்த ராஜபக்ஷ,
No comments:
Post a Comment