Saturday, November 30, 2019

அடித்தார் கமால் அந்தர் பல்டி! குற்றம் புரியாத இராணுவத்தினரே விடுவிக்கப்படுவார்களாம்!!

குற்றங்கள் புரிந்ததாக சிறையிலடைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களில் நிரபராதிகளான இராணுவத்திரே விடுவிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளார் பாதுகாப்பு செயலர் கமால் குணரட்ண.

பாதுகாப்பு செயலாளராக கடமையேற்ற பின்னர் இன்று முற்பகல் கண்டியிலுள்ள மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களைச் சேர்ந்த பீடாதிபதிகளான சங்கைக்குரிய தேரர்களை சந்தித்த பின்னர், உறுதிவழங்கியவாறு கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்தினர் எப்போது விடுவிக்கப்படுவர் என ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது மேற்கண்டவாறு கூறிய கமால் குணரட்ண மேலும் தெரிவிக்கையில்:

தேர்தல் பிரச்சாரங்களின்போது நீதிக்குப்புறம்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை நான் பதவிக்கு வந்தவுடன் விடுதலை செய்வேன் என அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தெரிவித்திருந்தது உண்மைதான். அதன்பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் நிரபராதிகள் யார் என்பது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்டுவருகின்றோம். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி என்னிடம் பணிப்பு விடுத்துள்ளார். அக்கருமங்களை நாம் இந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு பணிந்து மேற்கொண்டு, அவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் வடக்கிலுள்ள இராணுவத்தினர் திருப்பி அழைக்கப்படுவார்களா என கேட்கப்பட்டபோது, அங்குள்ள முகாம்களை அகற்றுவதற்கான எவ்வித காரணங்களும் இல்லை எனக்கூறிய அவர் முகாம்கள் இருப்பது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக என்றார்.

அத்துடன் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக சங்கைக்குரிய தேரர்களுக்கு விளக்கிய பாதுகாப்பு செயலாளர், இராணுவத்தினரை நாடுபூராக வைத்திருப்பதாகவும், குற்றங்களை கட்டுப்படுத்தவும் நாட்டின் சட்டம் ஒழுங்கை பேணவும் தாம் பொலிஸாரையே ஈடுபடுத்துவதாகவும் பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாத கருமங்களை விசேட அதிரடிப்படையினரை கொண்டு கையாளவுள்ளதாகவும், அவர்களாலும் கையாள முடியாத நிலை ஏற்படின் இராவத்தினரின் சேவையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment