Sunday, November 10, 2019

கோத்தாவின் இரட்டை குடியுரிமை மீண்டும் சர்ச்சையில்! போலியான வதந்திகளை நம்பவேண்டாம் என்கிறார் அலி சப்ரி.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் இரட்டைக்குடியுரிமை விவகாரம் மீண்டும் அமெரிக்க நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையரான அநுர ரூபசிங்க என்பவர் அமெரிக்க நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்து, கோத்தபாய ராஜபக்ச இன்னும் அமெரிக்க பிரஜையே என்பதை அறிவிக்குமாறு கோரியுள்ளார்.

இவ்விடயம் இன்று ஊடகங்களின் கவனத்தை மீண்டுமொருமுறை ஈர்த்துள்ள நிலையில், கோத்தபாயவின் சட்டத்தரணி அலி சப்ரி, தனது கோத்தபாய சட்டப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமையை கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ தற்போதும் அமெரிக்க குடிமகன் என்று பரவிவரும் வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அவர் அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான அனைத்து ஆவணங்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையகத்திற்கு தான் நேரடியாக சென்று மேற்குறித்த ஆவனங்களை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவரிடமும் (ரட்ணஜீவன் கூல்) அடங்கலாக கையளித்துள்ளதாக சப்ரி மேலும் சுட்டிக்காட்டினார்.

எது எவ்வாறாயினும் மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்னமும் அமெரிக்க பிரஜையே என அறிவிக்குமாறும், அமெரிக்க பிரஜா உரிமைச் செயற்பாடுகளை நீக்கிக் கொள்ளல் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி இலங்கை மக்களை ஏமாற்றுவதை தடுத்து நிறுத்தும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் கோரி, அமெரிக்க நிவ் ஜர்சியில் வசிக்கும் இலங்கையரான அநுர ரூபசிங்க என்பவர் நிவ்யோர்க்கில் அமைந்துள்ள தென் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கின் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் ஆர். பொம்பியோ மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதிவாதியான கோட்டாபய, இராஜாங்கச் செயலாளர் மற்றம் இராஜாங்கத் திணைக்களம் இதவரையில் கோட்டாபயவின் குடியுரிமை விலக்கிக் கொள்ளப்பட்டமை தொடர்பான தகவல்களை மறைத்துள்ளதாகவும், அது இருண்ட மேகங்களால் மறைக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முறைப்பாட்டாளரின் பிரதான வாதங்கள் சில உள்ளன. அவற்றுள் பிரதானமானது, கோட்டாபயவின் பிரஜா உரிமையை விலக்கிக் கொள்வதற்காக விண்ணப்பிப்பது அமெரிக்கச் சட்டத்தின் கீழ் சுயமாக இடம்பெறும் ஒரு விடயமல்ல. அத்துடன் இதற்கு முன்னர் கோட்டாபயவிற்கு எதிராக அஹிம்சா விக்ரமதுங்கவின் மனுவிற்கு கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு அமைய கோட்டாபயவின் குடியுரிமை விவாதத்திற்குரியது என தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகும்.

இதனடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் பெரும்பாலும் வழங்கப்படப் போவது கலிபொர்னியா மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இணையான தீர்ப்பாக இருக்கும். இதனடிப்படையில் கோட்டாபய இன்னமும் அமெரிக்கப் பிரஜையே என உறுதியானால் வரும் 16ம் திகதி தேர்தலில் கோட்டாபய வெற்றி பெற்றாலும் அதில் பயனேதும் இருக்கப் போவதில்லை.

காரணம் கண்டிப்பான அவரது நியமனத்திற்கு எதிராக தேர்தல் மனு தாக்கல் செய்து நீண்ட காலம் வழக்கு இழுபட்டுச் செல்லாமல் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனதைப் போன்று கோட்டாபயவின் நியமனமும் இரத்தாகிவிடலாம்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com