ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழ் மக்களுக்கான எந்த தேவைகளையும் பூர்த்தி செய்யாதபோதும், அவர்கள் அக்கட்சியின் வேட்பாளருக்கு தமிழ் மக்களை வாக்களிக்க கோருகின்றார்கள் என்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியிடம் பணம் பெற்றுக்கொண்டுள்ளதா என்ற சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ள அவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சொந்த நலன்களுக்காக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய செயற்பட்டு மட்டுமே அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கில் உள்ள சாதாரண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறிவிட்டனர்.
நான் வடக்கில் இருக்கும்போது இதனை கூறுகிறேன்., தேர்தல் பிரசாரத்திற்காக மட்டுமல்லாமல், இங்குள்ள பொதுமக்களின் கஷ்டங்களை தொடர்ந்து கேட்பதற்கும், எந்த வகையில் அவர்களுக்கு உதவி என்பதற்காகவும் இதனை கூறுகிறேன்.
2015 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சொந்த நலன்களுக்காக செயற்பட்டதே தவிர குறிப்பாக வடக்கு தமிழர்களுக்கு வேலை செய்ய தவறிவிட்டது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் தமது கட்சியின் மத்திய குழு கூட்டத்தை நடத்தியபோது, மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதன் மூலம் இதனை தெளிவாக காண முடிந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்துடன் காணாமல் போன தமது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிப்பதில் தோல்வியடைந்து விட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்த மக்களை சந்திக்காமல் அங்கிருந்து வெளியேற முயன்றபோது, ஆர்ப்பாட்டகாரர்கள் அவர்களை தாக்க முயன்றனர். வடக்கில் காணாமல் போன பலர் இருக்கின்றனர் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர், காணாமல் போனவர்கள் தொடர்பில் ஏன் எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர், ஏன் இதற்கு காரணமான ராஜபக்சவினரிடம் கேள்வி எழுப்புவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூறுகின்றனர் என தெரிவிப்பதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அண்மையில், வடக்கிற்கு தொடர்ச்சியான சுற்றுப்பயணங்களை மேற்கொண்ட நமல், கடந்த மாதம் அரசாங்கத்தினால் மிகவும் அவசரமாகவும் திறக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் கிளிநொச்சி விளையாட்டு வளாகம் என்பன மோசமாக பராமரிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
இது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன தமிழ் மக்களுக்கு காட்டும் அவமதிப்பை அம்பலப்படுத்தியுள்ளது.
விமான நிலையம் சர்வதேச தரத்தில் இல்லை, கன மழை பெய்யும் போது ஓடுத்தளத்தில் வெள்ளம் ஏற்படும். இது விமானங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும். கிளிநொச்சி விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீரில் பாசி பிடித்துள்ளது. பிள்ளைகள் பயன்படுத்தும் வகையில் அது பராமரிக்கப்படவில்லை எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இலங்கை தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் மீது வெறுப்பை கொண்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச கடந்த நான்கு ஆண்டுகளில் வடக்கு மக்களுக்கு எந்த உதவிகளையும் செய்யவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்ததில் நிதி கொடுக்கல் வாங்கல் இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சஜித் பிரேமதாச, ரணசிங்க பிரேமதாசவின் மகன். ரணசிங்க பிரேமதாச இலங்கையின் பிரதமராக பதவி வகித்த காலத்தில் இலங்கை தமிழர்கள் மற்றும் ஜே.வி.பி புரட்சியாளர்களுக்கு சித்திரவதைகள் நடந்jதுடன் கொலை செய்யப்பட்டனர். இதற்காக எந்த நடவடிக்கைகளும் எடுக்காமை தொடர்பாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.
தமிழ் மக்களின் குரல் எனக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவை அனைத்தையும் மறந்து விட்டது.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்த பின்னர், கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யார் வெல்ல வேண்டும் யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே தமது தீர்மானத்தின் அடிப்படை என கூறியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment