Saturday, November 23, 2019

நீதியை அடைவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஒரு நாட்டின் நிலையான சமாதானம் தங்கியுள்ளது.

முரண்பாட்டுக்கான காரணங்களுக்குத் தீர்வை ஏற்படுத்தி கடந்த கால துயர்களை நிவர்த்தி செய்து நீண்டகாலத்துக்கு நிலைத்து நிற்பதான நீதியை அடைவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்தான் ஒரு நாட்டின் நிலையான சமாதானம் தங்கியுள்ளது என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி பயிற்சிப் பிரிவின் ஏற்பாட்டில் அதன் பொறுப்பாளர் கே.தங்கவேல் தலைமையில் நேற்று (22) கூட்டுறவு அபிவிருத்தி பயிற்சி பிரிவு மண்டபத்தில் இடம்பெற்ற உயர் அதிகாரிகளுக்கான பயிற்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மனித உறவுகளில் மோதல் என்பது பொதுவாக முரண்பாடுகள் உள்ள திறத்தவர்களுக்கிடையே காணப்பட்டாலும், இது ஏற்படுகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் வன்முறைகள் தலைதூக்குகின்றது. முரண்பாடுகள் வளர்க்கப்படாமல் உடன்பாடுகளை வெளிப்படைத்தன்மைமிக்கதாக செய்வதன் மூலம் வன்முறைகளைத் தடுக்க முடியும்.

அண்மைக்காலமாக மோதல்களை தீர்த்துவைப்பதற்கு வன்முறைகளை வழிமுறைகளாகக் கையாளுகின்றனர். மோதல் தடுப்பு என்பது உடனடியாகச் செய்யப்பட வேண்டியதொன்றாக இருந்தாலும் இது இரண்டு நிலைகளில் மேற்கொள்ளப்படணே்டும்.

மோதல் தோற்றம் பெறுவதற்கு முன்னரே அதன் அறிகுறிகளை அறிந்து அவற்றை தடை செய்வது மற்றயது மோதல் தோற்றம் பெற்றுவிட்டநிலையில் பக்கச்சார்பின்றி உடனடியாக சாதாரண நிலைமைக்குத் திரும்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகும். இம்முறைமை எவ்வாறாயினும் சமூக நீதி என்பதுடன் எல்லாசந்தர்ப்பங்களிலும் ஏற்புடையதல்ல.

முரண்பாடு என்பது முரண்படு அக்கறைகளைக் கொண்டுள்ள இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்களிடையேயான உறவு முறையாகும். ஆனால் வன்முறை என்பது உடல்சார், உளசார், சமூக அல்லது சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி தமது முழுமையான ஆற்றலை அடைவதனைத் தடுக்கின்ற செயல்கள், சொற்கள், மனப்பான்மைகள், கட்டமைப்புகள், முறைமைகள் என்பவைகளை உள்ளடக்குகின்றது.

இணக்கப்பாட்டினை நிரந்தரமாகப் பேணவேண்டுமாகவிருந்தால் இருபக்க பேச்சுவார்த்தை அவசியம். இரு தரப்பினரும் சாத்தியமான விருப்பத் தேர்வுகள் பற்றி நேரடியாகக் கலந்துரையாடலில் ஈடுபட்டு தீர்வொன்றை அடைவதனை இயலச்செய்கின்ற செயற்பாடாகும். இது சமாதானத்திற்கு வழிவகுக்கும்.

சமாதானம் என்பதை ஒருவன் முறையில்லாத நிலை எனக் கூறினாலும் நிரந்தர சமாதானம் அடையப்படவேண்டுமாகவிருந்தால் அது சமுகத்தின் அடிமட்டத்திலேயே கட்டியெழுப்பப்படவேண்டும். முரண்பாட்டின் திறத்தவர்களிடையே பரஸ்பர நம்பிக்கையை மீள் கட்டியெழுப்புதல் மற்றும் கலந்துரையாடல்களை இயலச் செய்தல், முரண்பாட்டின் திறத்தவர்களை நேரடி தொடர்பாடலில் ஈடுபடுத்தல் போன்ற செயற்பாடுகள் ஒரு நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பைஷல் இஸ்மாயில்

No comments:

Post a Comment