கடந்த காலங்களில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து படையினருக்கும், பிக்குமார்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவே வழிநடத்தியதாக ராவணா பலய அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி நிஷாந்த டி சில்வா தற்போது வெளிநாட்டிற்குச் தப்பிச்சென்றுள்ள நிலையில், தப்பிச்செல்லாத முன்னாள் அமைச்சர்கள் ரிசாட் பதியூதீன், ஹக்கீம் உள்ளிட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு ராவணா பலய அமைப்பின் இணைப்பாளரான இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய இடைக்கால அமைச்சரவைக்கான இராஜாங்க அமைச்சர்கள் கடந்த புதன்கிழமை நியமிக்கப்பட்டனர்.
இதில் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்ற அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரான ஜயந்த சமரவீர இன்றைய தினம் தனது அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார்.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சருக்கு ஆசி வழங்குவதற்காக பௌத்த தலைமை பிக்குகள் அழைக்கப்பட்டிருந்ததோடு , கடும்போக்குவாத பௌத்த அமைப்புக்களில் ஒன்றாகக் கருதப்படும் ராவணா பலய அமைப்பின் இணைப்பாளரான இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரரும் கலந்துகொண்டிருந்தார்.
இதற்கு முன்னர் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பிலும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த சத்தாதிஸ்ஸ தேரர், உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், ஹிஸ்புல்லா போன்றவர்களைக் கைது செய்யுமாறு வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் இராஜாங்க அமைச்சருக்கு ஆசிகூறி உரையாற்றிய உரையின்போதும் இதனையே மீண்டும் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment