Monday, November 11, 2019

துரோகியை விட எதிரியை நம்பலாம்… முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு மகிந்தவிடம்: விடுதலைப்புலிகள் அறிவிப்பு!

வடகிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு அளித்து பாதுகாத்தவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கே.இன்பராசா தெரிவித்துள்ளார்.

மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

இம்முறை தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். யுத்தத்திற்கு பின்னர் தமிழ் மக்களுக்கு யார் வந்தால் நன்மை என்று சிந்தித்து பாருங்கள். இலங்கையில் மாறி மாறி வந்த சிங்கள அரசாங்கங்கள் தமிழர்களை அழித்தது தான் உண்மை. அவர்கள் தமிழர்களுக்கு எதையும் தரப்போவதும் இல்லை. இனியும் கிடைக்கப்போவதும் இல்லை. எனவே தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி எழுகிறது.

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் கட்சியை பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு கோட்டபாய ராஜபக்ச வந்தாலும் சரி அல்லது சஜித் பிரேமதாச வந்தாலும் சரி எந்த அரசியல் தீர்வும் கிடைக்கப்போவதில்லை.
ஆனால் 2009 ம் ஆண்டு யுத்தத்தில் மகிந்த ராஜபக்ச அரசு தமிழர்களை அழித்தது. யுத்தம் நடந்தால் அழிவு ஏற்படுவது வழமை அந்தவகையில் யுத்தத்தில் பெருமளவு தமிழ் மக்கள் அழிக்கப்பட்டாலும். யுத்தத்திற்கு பின்னர் யுத்தத்தில் ஈடுபட்ட போராளிகள் 12000 பேருக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்தது முதல் கொண்டு முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரம், தொழில் வாய்ப்பு வழங்கி எங்களை இன்று வரை பாதுகாத்தது மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தான்.

துரோகியை விட எதிரியை நம்பலாம் என்றவகையில் எம்மை அழித்தது மகிந்த ராஜபக்ச அரசாங்கமாக இருந்தாலும் எமக்கு புனர்வாழ்வு அளித்து ஏனைய அனைத்து போராளிகளையும் பாதுகாத்ததும் மகிந்த அரசாங்கம்தான். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றியதே தவிர வேறு எதனையும் செய்யவில்லை. தமிழ் மக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் துரோகம் செய்து விட்டது. தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வரை தமிழ் மக்களுக்கு செய்தது என்ன? குறைந்தளவு உள்ள அரசியல் கைதிகளை கூட அவர்களுக்கு விட முடியாமல் போயுள்ளது.

அரசியல் தீர்வை வழங்குவதாக கூறி தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றி உள்ளனர். ஆனால் இவர்களை நம்பி மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களது ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கி உள்ளனர்.
எம்மை பொறுத்தமட்டில் சொல்வதை செய்பவர்கள் மகிந்த ராஜபக்ச அரசில் உள்ளவர்கள்தான். முன்னாள் போராளிகள் விடுதலை, வீதி அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, பட்டதாரிகளுக்கு அதிகளவு வேலை வழங்கியது, இலங்கையில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டது உட்பட அனைத்தையும் மகிந்த ராஜபக்ச அரசாங்கமே செய்துள்ளது.

இன்று வடமாகாணத்தில் உள்ள 3500 முன்னாள் போராளிகளை சிவில் பாதுகாப்பு பிரிவில் இணைத்து வேலைவாய்ப்பு வழங்கியுள்ளனர். முன்னாள் போராளிகளு வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளனர். இதை விட கிழக்கு மாகாணத்தின் இருப்பை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் கோட்டபாய ராஜபக்சவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

கிழக்கிற்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தவர்கள் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தான். தற்போது சஜித் பிரேமதாசா கிழக்கில் முஸ்லீம் தலைவர்களை கூட்டிக்கொண்டு திரிகிறார். அவர் வந்தால் நாட்டில் முஸ்லீம் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கும். நாட்டில் குண்டுகள் வெடிக்கலாம். எனவே சஜித் வருவது நாட்டுக்கே ஆபத்து. ஆனால் கோட்டபாய ராஜபக்ச வெற்றி பெற்றால் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். முஸ்லீம் தீவிரவாதம் முற்றாக ஒழிக்கப்படும். எனவே தமிழ் மக்கள் இம்முறை கோட்டபாய ராஜபக்சவுக்கு வாக்களித்தால்தான் கிழக்கில் தமிழர்களின் இருப்பை பாதுகாக்க முடியும் என்றார்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கே.இன்பராசா, செயலாளர் ந.அண்டனி ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment