Tuesday, November 26, 2019

ஜூலியன் அசாஞ் சிறையிலேயே இறக்க நேரிடலாம். 60 வைத்தியர்கள் எச்சரிக்கை!

விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ் மனச்சோர்வு உள்ளிட்ட உடல் மற்றும் உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகுந்த உடனடி சிகிச்சை இல்லாமல் அவர் சிறையில் இறக்கக்கூடும் என 60 மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 60 மருத்துவர்களால் பிரித்தானிய உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் அசாஞ் குறித்து கடுமையான கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க இரகசியங்களை வெளியிட்டது உட்பட 18 குற்றச்சாட்டுகளுக்காக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதை எதிர்த்து வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள வழக்கு விசாரணைக்கு முன்னதாக 48 வயதான அசாஞ் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையிலிருந்து மருத்துவ குழு, மதிப்பீடு செய்து சிகிச்சை அளிக்கக்கூடிய பல்கலைக்கழக போதனா மருத்துவமனைக்கு அசாஞ்சை மாற்றுமாறு மருத்துவர்கள் இந்தக் கடிதத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜனாநாயகத்தின் பிதாக்கள் என்று கூறிக்கொள்ளுகின்ற அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து கருத்துச் சுந்திரத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கு எடுத்திருக்கின்ற இந்நடவடிக்கைக்கெதிராக உலகமே திரண்டு நின்றாலும் பிரித்தானியாவும் அமெரிக்காவும் அசாஞ் விடயத்தில் அப்பட்டமான உரிமை மீறல்களை மேற்கொண்டுவருகின்றது.

No comments:

Post a Comment