Sunday, November 24, 2019

42 வருடகால அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடைபெறுகின்றார் ரணில் விக்கிரமசிங்க!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து விடைபெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியினூடாக அவர் இம்முடிவை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய பாராளுமன்றம் நிறைவடையும் போது தனது 42 வருடகால அரசியல் வாழ்க்கைக்கு விடைகொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு தரப்பினரால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சித் தலைமை பதவி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால பொறுப்பு சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவேண்டும் என ஜனாதிபதி தேர்தலுக்கு பின் அவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.

அவ்வாறு நடைபெறாவிடின் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியை உருவாக்குவதற்கு சிலர் எத்தனித்து வருகிறார்கள்.

இந்தப் பின்னணியில்தான் அவர் இனி அரசியலில் ஈடுபடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியை காப்பாற்றக்கூடிய ஒரு தலைவரிடம் கட்சியை ஒப்படைக்க ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளதுடன், அத்தகைய தலைவரை சந்தித்தாலும் இல்லாவிட்டாலும், தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தோல்விகளுக்கும் காரணம் விரைவாக செயற்படுவது.

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தோல்விக்கு அவசர முடிவுகளே காரணம் என விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் பொறுமையாக செயற்படவேண்டும் என்பதோடு இளம் அரசியல்வாதிகளுக்கு இது மிக முக்கியமான காரணம் என்று அவர் அறிவுரை கூறியுள்ளார்.
தான் பிரதமராக நியமிக்கப்பட்டது மிகவும் பொறுமையாக இருந்ததன் மூலம் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அரசியலில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும், கால நேரம் பார்த்து செயற்படவேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க இளம் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com