சிறையிலடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் பதிப்பாசிரியர் ஜூலியன் அசான்ஜ் கடந்த 21 அன்று இலண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார். இது, ஏப்ரல் 11 அன்று ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து பிரிட்டிஷ் பொலிஸ் அவரை கைது செய்து அதிகூடிய பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையிலடைத்ததற்கு பின்னர் பகிரங்கமான அவரது மூன்றாவது பிரசன்னமாகும்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தி உலகளவிலான கவனத்தை ஈர்த்தவரும், மேலும் அதற்காக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பல ஊடகத்துறை விருதுகளை பெற்றவருமான அசான்ஜ் ஒரு பாதுகாப்பான செர்கோ சிறை வாகனத்தில் நீதிமன்றத்திற்கு வந்தார்.
நீதிபதி வனேசா பாரைட்சர் அவரது பெயரையும் பிறந்த தேதியையும் கூறும் படி கேட்டபோது, வலுவான கண்ணாடி பலகங்களால் மூடப்பட்ட கைதி கூண்டில் நின்ற அசான்ஜ் சிந்தனையளவில் சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டார்.
ஒன்றரை மணிநேர வழக்கு மேலாண்மை விசாரணையின் ஆரம்ப தருணங்களிலேயே அசான்ஜ் மீதான பாரைட்சரின் பழிவாங்கும் தன்மை அப்பட்டமாகத் தெரிந்தது. பொதுமக்கள் காட்சி கூடத்தில் அமர்ந்தவாறு அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த அசான்ஜின் ஆதரவாளர்கள் “தொந்திரவு செய்தால்…. வெளியேறும் படி அவர்கள் கேட்கப்படுவார்கள்” என அவர் தெரிவித்தார். அங்கு அமர்ந்திருந்தவர்களில் விக்கிலீக்ஸின் ஆசிரியரும், மூத்த ஊடகவியலாளருமான கிறிஸ்டின் ஹ்ராஃப்சன், புலனாய்வு ஊடகவியலாளர் ஜோன் பில்ஜெர் மற்றும் இலண்டனின் முன்னாள் மேயர் கென் லிவிங்ஸ்டன் ஆகியோர் அடங்குவர்.
கிறிஸ்டின் ஹ்ராஃப்சன் (இடது) விசாரணைக்குப் பின்னர் பேசுகிறார் அருகே ஜோன் பில்ஜெர்
அமெரிக்க நீதித்துறை சார்பாக ஆஜரான ஜேம்ஸ் லூயிஸ் QC, “ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை திட்டங்கள் சம்பந்தமான அமெரிக்க இரகசிய ஆவணங்களை வெளியிடுவது தொடர்பாக “உளவு பார்த்தது” மற்றும் “செல்சியா மானிங்கின் குற்றச்செயலுக்கு துணைநின்றது” குறித்து “திரு அசான்ஜை தன்னிடம் ஒப்படைக்க அமெரிக்க அரசாங்கம் கோருகிறது” என்று தெரிவித்தார். மேலும், அசான்ஜ் “ஒரு ஊடகவியலாளர் அல்ல” என்றும் வலியுறுத்தினார். இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வ இரகசியங்கள் சட்டத்தை மேற்கோள் காட்டி, அவரது நடவடிக்கைகள் “அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இரு நாடுகளிலும் குற்றகரமாக” இருந்தன என்றும் அவர் கூறினார்.
அசான்ஜ் சார்பாக மார்க் சம்மர்ஸ் QC ஆஜராகி, தனது கட்சிக்காரருக்கு எதிரான ஒப்படைப்பு வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். 2003 இங்கிலாந்து/அமெரிக்க ஒப்படைப்பு ஒப்பந்தம், “அரசியல் குற்றத்திற்காக ஒப்படைப்பு செய்ய கோரப்படும் பட்சத்தில், அந்த ஒப்படைப்புக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது” என்று வெளிப்படையாக கூறுகிறது. இந்நிலையில், தனது கட்சிக்காரரின் அரசியல் நோக்கங்கள் “நன்கு அறியப்பட்டவை” என்று சம்மர்ஸ் கூறினார்.
சம்மர்ஸ் தொடர்ந்து, 2010 முதல் அசான்ஜ் மற்றும் அமெரிக்க இராணுவ தனியார் இரகசிய செய்தி வெளியீட்டாளர் செல்சியா மானிங்கிற்கும் எதிரான அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகள் “புலனாய்வு ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்கள் உள்ளடங்கலான இரகசிய செய்தி வெளியீட்டாளர்கள் மீது நடத்தப்பட்ட போரின் ஒரு பகுதியாக” இருந்தன என்று தெரிவித்தார். மேலும், ஈக்வடோர் மீதும், மற்றும் அசான்ஜிற்கு எதிராக பொய் சாட்சியமளிக்க மறுத்ததற்காக தற்போது சிறையில் இருக்கும் மானிங் மீதும் அமெரிக்க அரசு அரசியல் அழுத்தம் கொடுத்து வந்தது. விக்கிலீக்ஸ் ஒரு “விரோத அரசு-சாரா புலனாய்வு அமைப்பு” என்று விவரிக்கப்பட்டு, மேலும் இந்த வழக்கு ட்ரம்ப் நிர்வாகம் மூலம் “புத்துயிர்” பெற்றுள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான இந்த தாக்குதல் “முன்னுதாரணமற்றது”.
பெப்ரவரி 25 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒப்படைப்பு விசாரணையை மூன்று மாத காலத்திற்கு ஒத்திவைக்க அனுமதிக்கும் படி பாரைட்சரிடம் சம்மர்ஸ் கோரினார். அசான்ஜின் சட்ட உரிமைகளுக்கு எதிரான சட்டவிரோதமான அமெரிக்க தலையீட்டின் “வழமைக்குமாறான” வெளிப்பாடுகளை அவர் சுட்டிக்காட்டினார். ஸ்பானிய பாதுகாப்பு நிறுவனத்திற்கு எதிராக அசான்ஜ் எடுத்த சட்ட நடவடிக்கை, ஈக்வடோர் தூதரகத்தில் அசான்ஜ் மற்றும் அவரது வழக்கறிஞர்களிடையே நடந்த “சிறப்புரிமை பெற்ற விவாதங்களில் அமெரிக்கா தீவிரமாக தலையீடு செய்தை” அம்பலப்படுத்தியது.
அமெரிக்க அரசு, தொலைபேசி மற்றும் கணினிகளிலிருந்து சட்டவிரோதமாக தகவல்களை திருடுவது, “அலுவலகங்களுக்குள் முகமூடியணிந்த நபர்களை அனுப்பி சேதப்படுத்துவது” மற்றும் “அசான்ஜை கடத்தவும் துன்புறுத்தவும் திட்டமிடுவது” ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தது.
“வெளிப்படையாக கூறினால், எங்களுக்கு இன்னும் அதிக நேரம் தேவை,” என்று அவர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் உள்ள சிக்கல்களின் “முக்கிய தன்மையின் காரணத்தினால்” “பெரும்பாலான வழக்கறிஞர்களால் பரிசோதிக்கப்படவேண்டிய ஆதாரங்களை சேகரிப்பதும்” இதற்கு அவசியமாகிறது என்றும் கூறினார்.
பெல்மார்ஷ் சிறையில் அசான்ஜ் எதிர்கொள்ளும் நிலைமைகள் காரணமாக தாமதிப்பதும் தேவைப்பட்டது என்று சம்மர்ஸ் விளக்கமளித்தார். அவரது கட்சிக்காரர், தகவல்களை அணுக முடிவதில்லை, அவரது அமெரிக்க சட்டக்குழுவுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடிவதில்லை, மேலும் அவருக்கிருந்த அஞ்சல் கட்டுப்பாடுகளினால் இன்றைய விசாரணைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் அவர் தனது வழக்கறிஞர்களிடமிருந்து நீதிமன்ற ஆவணங்களை பெற்றிருக்கிறார் என்று மேலும் விளக்கமளித்தார்.
அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாக பாரைட்சருக்கு லூயிஸ் பதிலளிக்கையில், “அசான்ஜின் வழக்கறிஞர்கள் மூன்று மாத கால தாமதத்திற்கு வாதிடுவதை “ஒப்புக்கொள்வதில் நீங்கள் ஏமாந்துவிடக் கூடாது” என்று கூறினார். “இது ஒரு மதிப்பீடு மட்டுமே.”
முழு ஒப்படைப்பு விசாரணைக்கான பெப்ரவரி தேதி “நிலையானது அல்ல” என்று பாரைட்சரிடம் சம்மர்ஸ் முறையிட்டார். நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கான அசான்ஜின் உரிமைக்கு ஆபத்து ஏற்படுத்தப்பட்டு வந்தது என்று அவர் மீண்டும் மீண்டும் தெரிவித்தார்.
ஆயினும், பாரைட்சர், “லூயிஸ் பரிந்துரைத்த கால அட்டவணையை பின்பற்றுவதே எனது நோக்கமாகும்” என்று இரக்கமின்றி தெரிவித்தார். மேலதிக ஆதாரங்களைத் திரட்ட இரண்டு மாத கால நீட்டிப்பை பிரதிவாதி தரப்பினருக்கு அவர் வழங்கிய அதேவேளை, முழு ஒப்படைப்பு விசாரணை பெப்ரவரி 25 அன்று தொடரும் என்று தீர்ப்பளித்தார்.
இறுதியான பழிவாங்கும் நடவடிக்கையாக, அடுத்த ஆண்டு ஒரு வாரத்திற்கு நீடிக்கும் ஒப்படைப்பு விசாரணை பெல்மார்ஷ் சிறைக்கு அருகிலுள்ள பெல்மார்ஷ் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திலேயே நடத்தப்படும் என்று பாரைட்சர் தெரிவித்தார். பாரைட்சர் இதை அறிவிக்கையில் பொதுமக்கள் கூடத்தில் பெருமூச்சுவிடும் சப்தங்கள் கேட்டன. பெல்மார்ஷ் சிறைக்கு அருகிலுள்ள இடத்தில் ஐந்து இருக்கைகளைக் கொண்ட “பொதுமக்கள் கூடம்” தான் உள்ளது என்ற நிலையில், இது அனைத்தையும் பொதுமக்களினால் கண்காணிக்கப்படுவதை மறுப்பதுடன், குறிப்பிட்ட தகவல்களை மட்டும் வெளியிடும் வகையில் ஒருபக்க சார்புடைய ஊடகங்கள், தேர்ந்தெடுத்த தவறான தகவல்களையும் பொய்களையும் பரப்ப அனுமதிக்கிறது.
பாரைட்சரின் இடத் தேர்விற்கு சம்மர்ஸ் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். நீதிமன்றத்தை சென்றடைவது கடினம் என்பதற்காக மட்டுமல்லாது –சட்டக்குழுவிற்கு ஏற்கனவே சாத்தியப்படாத அட்டவணையாக அது இருப்பதுடன் அவர்களின் வேலைப்பழுவையும் சேர்த்து– அங்கிருக்கும் வசதிகள் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தை விட குறைவாக இருந்தன என்பதுடன், இரகசிய சட்ட விவாதங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கூட்ட அறைகள் கூட அங்கு இல்லை என்பது போன்ற அவரது கவலைகள் நிராகரிக்கப்பட்டன.
விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், பாரைட்சர் அசான்ஜின் பக்கம் திரும்பி அவரை எழுந்திருக்கச் சொன்னார். பின்னர், “இன்று இங்கே என்ன நடந்தது என்பது உங்களுக்கு புரிகிறதா?” என்று கேட்டார்.
பல மாதங்கள் தனிமைச் சிறைவாசத்தை சகித்தவரும் மற்றும் வெளிப்புறத் தகவல்களை தினசரி அணுக முடியாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தவருமான அசான்ஜ், ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர், “எனக்கு புரிகிறதா? என்றால், உண்மையில் இல்லை” என்று பதிலளித்தார்.
“நீங்கள் வேறெதையும் சொல்ல விரும்புகிறீர்களா?” என்று பாரைட்சர் அவரிடம் கேட்டார்.
“இது எவ்வாறு பாரபட்சமற்றது என்பது எனக்கு புரியவில்லை.” கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அசான்ஜ் பதிலளித்தார், என்றாலும் மென்மையாகவும் சில நேரங்களில் செவிக்கு புலப்படாத வகையிலும் அவர் பேசினார். “இந்த வழக்கிற்கு தயாராவதற்கு இந்த வல்லரசுக்கு 10 ஆண்டுகள் இருந்தன. என்னால் எதையும் நினைவுபடுத்த முடியவில்லை. என்னால் எழுதப்பட்ட எதையும் என்னால் அணுக முடியவில்லை. ஒரு வல்லரசின் நோக்கத்திற்கு எதிராக இதுபோன்ற மட்டுப்படுத்தப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு எதையும் செய்வது மிகவும் கடினம்…. [செவிக்கு புலப்படவில்லை] ஆவணங்களை கையாள்வதில் அவர்கள் நியாயமற்ற தன்மையுடன் இருக்கிறார்கள். எனது உளவியலாளர் மூலம் எனது வாழ்வின் உட்புறத்தை அவர்கள் [அறிவார்கள்]. அவர்கள் எனது குழந்தைகளின் டி.என்.ஏ. ஐ திருடுகிறார்கள். எனவே, இங்கே நடப்பதில் பாரபட்சம் உள்ளது” என்றார்.
பின்னர், “என்னால் சரியாக சிந்திக்க முடியவில்லை,” என்றவர் முடித்தார், கண்ணீருடன் போராடி, இரு கைகளையும் தனது தலைக்கு மேல் உயர்த்தினார். இது குறித்து, “நீங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலைமைகள் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்படாது,” என்று பாரைட்சர் பதிலளித்தார். பொதுமக்கள் கூடத்தில் அமர்ந்திருந்த அவரது ஆதரவாளர்களின் பார்வைக்கு புலப்படாத வகையில், அசான்ஜ் கைதி கூண்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் பேசிய கடைசி வார்த்தைகளாக அவை இருந்தன.
விசாரணைக்கு பின்னர் பேசிய விக்கிலீக்ஸின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டின் ஹ்ராஃப்சன் இவ்வாறு தெரிவித்தார்: “இந்த வழக்கு உடனடியாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். ஒப்பந்தத்தை எதிர்கொள்கையில் இது சட்டவிரோதமானது என்பதால் மட்டுமல்லாது, ஸ்பெயினில் பெரும்பாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்குகளில், அசான்ஜ் மற்றும் அவரது வழக்கறிஞர்களுக்கு எதிராக சட்டவிரோதமான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது என்பதற்காகவும் தான்”
நீதிமன்றத்திற்கு வெளியே, ஹ்ராஃப்சனும் பில்ஜெரும் அன்று காலை முழுவதும் அங்கு காத்திருந்த சுமார் 200 ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்பு உரையாற்றினர். அந்த கூட்டம், பிரான்சிலிருந்து கோச் வண்டி மூலம் இரவு முழுவதும் பயணித்து அங்கு வந்து சேர்ந்திருந்த டசின் கணக்கான மஞ்சள் சீருடையாளர்களையும் உள்ளடக்கியது.
அசான்ஜிற்கு ஆதரவாக பிரான்சிலிருந்து கலந்து கொண்ட சுமார் 100 மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பில்ஜெர் பின்வருமாறு தெரிவித்தார்: “முழு விடயமும் கோரமான அபத்தமானது. இந்த நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒப்படைப்புச் சட்டம் உள்ளது. இது குறிப்பாக, குற்றங்கள் அரசியல் சார்ந்தவையாக இருப்பின், சம்பந்தப்பட்ட எவரையும் பிற நாட்டிடம் ஒப்படைக்க முடியாது என்று தெரிவிக்கிறது… இது ஒரு சிறிய கிளர்ச்சியும் அல்ல, இது ஒரு கருத்தும் அல்ல, மாறாக அவை அரசியல் சார்ந்தவை. ஒன்றைத் தவிர அனைத்தும் 1917 உளவுச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை, இந்த சட்டம் அமெரிக்காவில் முதல் உலகப் போரின்போது நேர்மையாக எதிர்ப்பவர்களை சிறையிலிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.
தொடர்ந்து பில்ஜெர், “ஒரு மோசடியான நாடு தான் இதற்கான மூலமாக உள்ளது – அதாவது அந்த நாடு அதன் சொந்த சட்டங்களையும், சர்வதேச சட்டங்களையும் மற்றும் இந்த நாட்டின் சட்டங்களையும் புறக்கணிக்கிறது” என்று கூறி நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment