மனிதாபிமான செயற்பாடுகளுக்கு உதவுவதும் பயங்கரவாத செய்பாடுகளுக்கு துணைபோவதும் வேறு. மலேசிய பொலிஸ்.
மலேசியாவில் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மொத்தமாக 12 பேர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம். இந்நிலையில் இக்கைதுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைத்த புக்கிட் அமான் பயங்கரவாத விசாரனைப் பிரிவின் தலைவர் ஆயுப் கான் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதும் தமிழ் ஈழ விடுதலைப்புலி இயக்கத்திற்கு ஆதரவு கொடுப்பதும் வெவேவேறானாது என கூறியுள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:
இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மீது எனக்கும் அனுதாபம் உள்ளது. ஆனால் தீவிரவாத இயக்கத்தினர் மீது அனுதாபம் காட்ட முடியாது. இது இரண்டுக்கு வித்தியாசம் உள்ளது. அதே போலத்தான் பாலஸ்தீனத்திற்கும். அவர்கள் மீது அனுதாபம் காட்ட முடியும், ஆனால் அதற்காக அந்த ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜீஹாட் இயக்கதுடன் இணையவா முடியும் என ஆயும் கான் வினவினார்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்ததன் பெயரில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டது குறித்து பேசும் போது ஆயுக் கான் இதனைத் தெரிவித்தார். அவர்கள் ஐவரும் செயலிழந்த விடுதலைப் புலி இயக்கத்துக்கு நிதி வழங்கியது, ஆதரவு அளித்தது, நிதி திரட்டியது ஆகிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
இந்த ஐவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆகும்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 52 வயது இடைநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவரும் அடங்குவார். இவர் சமூக வலைத்தளத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகல் குறித்து பரப்புரை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
அடுத்ததாக 2ஆம் மற்றும் 3ஆம் நபரக்ள் மலாக்கா டுரியான் துங்கால் பகுதியில் கைது செய்யப்பானர். இவர்கள் இருவரும் உள்நாட்டுப் போரின்போது இறந்த விடுதலைப்புலி போராளிகளை நினைவுக்கூறும் நிகழ்வு ஒன்றினை கடந்த நவம்பர் மாதம் ஏற்பாடு செய்ததன் பேரில் கைது செய்யப்பட்டனர்.
மற்ற இருவர் பினாங்கு புக்கிட் பெர்தாஜாமில் கைது செய்யப்பட்டனர். 26 மற்றும் 29 வயதுமிக்க அவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் விடுதலைப் புலிகள் குறித்து பரப்புரை செய்ததன் பேரில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விடுதலைப்புலி இயக்கத்தின் கொடிகள், புத்தகம், போஸ்டர்ஸ் மற்றும் அந்த இயக்கத்தின் தலைவர்கள் படங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் மீதான விசாரணை தொடரும் மேலும் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது போலிஸ் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், அமைச்சர் குலசேகரன் கைது செய்யப்படுவாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் இந்தியாவின் நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் படம் எடுத்துக் கொண்டார் என்பதற்காக மட்டும் அவர் கைது செய்யப்படமாட்டார் என ஆயும் கான் தெரிவித்தார்.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் உணர்வுகளை தொடர்ந்து நிலைநாட்டும் முயற்சியாக தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் சீமான் தலைமையிலான அரசியல் கட்சி சில முக்கிய பிரமுகர்கள் உட்பட மலேசியாவில் உள்ள ஒரு தரப்பினருடன் தொடர்பை கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
விடுதலைப்புலிகளின் போராட்டத்தை தொடர்வதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மலேசியாவில் உள்ள சில முக்கிய பிரமுகர்களுடன் பல ஆண்டுகாலம் பல்வேறு கூட்டங்களையும் நாம் தமிழர் கட்சி நடத்தியுள்ளது.
மலேசியாவில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரூட்ட முயன்றதன் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எழுவரில் ஒருவர், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியுடன் அணுக்கமான தொடர்பை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சில இதர முக்கிய பிரமுகர்கள் இன்னும் சுதந்திரமாக இருந்தாலும் அவர்களின் நடவடிக்கையை போலீசார் கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பிரமுகர்கள் குறித்து அடையாளங்களை அறிந்திருந்தாலும் விசாரணை நடைபெற்று வருவதால் அதனை வெளியிடுவதில்லை என முடிவு செய்திருப்பதாக மலேசியன் இன்சைட் இணையதள பதிவேடு தகவல் வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தது, அவர்களுக்கு நிதியுதவி ஏற்பாடு செய்தது, மற்றும் அந்த இயக்கம் தொடர்பான ஆவணங்களை வைத்திருந்ததன் தொடர்பில் மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த ஜ.செ.க.வின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட எழுவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர், பேரா, கெடா, நெகிரி செம்பிலான் மலாக்கா மற்றும் கோலாலம்பூரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையின்றி 28 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படும் சோஸ்மா எனப்படும் சிறப்பு குற்றங்களுக்கான சட்டத்தின்கீழ் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அந்த ஐவரும் பினாங்கு, மலாக்கா, மற்றும் சிலாங்கூரில் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறினர்.
தமது கட்சியின் செல்வாக்கு மற்றும் நோக்கங்களை விரிவுபடுத்துவதற்கு 2012 ஆம் ஆண்டு முதல் மலேசியாவுக்கு வருகை புரிந்துவரும் சீமான் தமிழ் ஈழப் போராட்டத்தில் அனுதாபத்தை கொண்டிருக்கும் சில முக்கிய பிரமுகர்களுடன் பல்வேறு கூட்டங்களையும் நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
வியாழக்கிழமையன்று கைதுசெய்யப்பட்ட எழுவரில் ஒருவரான கலைமுகிலனையும் சீமான் சந்தித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் மலேசிய கிளையை அமைக்கும்படி கலைமுகிலனுக்கு சீமான் பணித்ததாகவும் தெரிகிறது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு உதவும் மற்றும் ஆதரவு தெரிவிக்கும் முதல் நோக்கத்தை நாம் தமிழர் மலேசியா கொண்டிருந்தாலும் போகப்போக தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு அது ஆதரவை தெரிவிக்கும் வகையில் மாறியது.
சமூக வலைத்தளங்களில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பானபல விவகாரங்களை பகிர்ந்து கொண்டு வருவதன் மூலம் கலைமுகிலன் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர் என்பதும் தெரியவருகிறது.
2016ம் ஆண்டில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மலேசியாவிற்கான இலங்கை தூதரை தாக்கியதில் அவர் சம்பந்தப்பட்டுள்ளார்.
தூதரை தாக்கியது உட்பட நான்கு குற்றச்சாட்டுக்களை கலைமுகிலனும் இதர இருவரும் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 9,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி கோலாலம்பூரில் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவிலுள்ள உணவகம் ஒன்றில் தமது நாம் தமிழர் கட்சியின் மலேசியா கிளையை சீமான் தொடக்கி வைத்ததாகவும் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவிலுள்ள இந்திய முஸ்லிம்கள் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராகும் பொருட்டு அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் மலேசியன் இன்சைட் தெரிவித்தது.
0 comments :
Post a Comment