Tuesday, October 29, 2019

குங்குமத்தை அழிக்கச் சொல்வதற்கும் பர்தாவை அணியாதே என்று கூறுவதற்கும் எவருக்கும் அதிகாரம் இல்லை - அனுர குமார.

தமிழ் பெண்ணை பார்த்து குங்குமப்பொட்டை அழித்துக்கொள் என்றோ, முஸ்லிம் பெண்ணை பார்த்து பர்தாவை அணியாதே என கூற எவருக்கும் அதிகாரம் இல்லை எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

அத்துடன் கடந்த காலங்களில் இந்த நாடு பாரிய மோதல்களுக்கு முகங்கொடுத்துவிட்டது . இனியும் அவ்வாறான நிலையை உருவாக்காது நாடாக நாம் முன்னோக்கி செல்ல முயற்சிக்க வேண்டும். இதில் சகல மக்களும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும். இன்று எமது நாட்டுக்கு புதிய அபிவிருத்தி இலக்கொன்றை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

திகாரி நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இன்று நாடு பாரிய கடன் நெருக்கடியில் உள்ளது. சமூகமாக பாரிய குற்றங்கள் ஈடுபடும் நாடு, இன மத முரண்பாடுகள் நிகழும் நாடு. அடிப்படை தேவைகள் எவையும் மக்களுக்கு வழங்க முடியாத ஆட்சியே கொண்டுசெல்லப்படுகின்றது. அவ்வாறான நிலையில் இருந்து நாட்டினையும் மக்களையும் மீட்க வேண்டும்.

கடன்களில் இருந்து நாம் எவ்வாறு மீள்வது என்பதை சிந்திக்க வேண்டும். இது குறித்து ஆழமாக கலந்துரையாடி நாம் தீர்வுகளை உருவாக்கியுள்ளோம். கடன்களை சரியான அபிவிருத்திக்கு உட்படுத்தியிருந்தால் இன்று எமக்கு இந்த நிலைமை உருவாகாது. கடன்களை மீள செலுத்தும் உறுதியாக அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்க வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்தால் ஆறு வருடங்களில் முழுக் கடனையும் மீள செலுத்தும் வேலைத்திட்டமொன்றை நாம் உருவாக்குவோம்.

கிராமிய மக்களின் கடன் நெருக்கடியில் இருந்து அவர்களை மீட்கும் உறுதியான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுப்போம். குறிப்பாக இன்று வடக்கில் தான் மக்கள் அதிகமாக கடன்களில் நெருக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. இவர்களை மீட்டெடுக்க நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். விவசாயம், தொழில்வாய்ப்பு மூலமாகவே அவர்களை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com