Monday, October 7, 2019

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் புகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் வைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அந்த வகையில், தமது சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு தெரிவித்து, ரயில்வே சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடந்த 12 நாட்களுக்காக மேற்கொண்டு வந்த வேலைநிறுத்த போராட்டை நிறைவு செய்துள்ளனர்.

இதேவேளை, இன்று (07) காலை முதல் 28 அலுவலக ரயில் சேவைகள் இடம்பெற்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெனாண்டோ தெரிவிக்கையில், வேலைநிறுத்தத்தால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் இன்னும் கணக்கிடப்படவில்லை எனவும்,
ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்ட பின்னர் பணிக்கு திரும்பிய ஊழியர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோரால் மிரட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் இதுவென்பதால், தொடர் வேலைநிறுத்த நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நேற்றையதினம் (06) ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்ட அரசாங்க ஊழியர்கள், திணைக்களங்கள், சபைகள், வங்கிகள் போன்றவற்றின் ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை, பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள் நேற்று (06) தேர்தல் ஆணையகத்தின் பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, அவர்கள் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்துவதாக உறுதியளித்ததாக தேர்தல் ஆணையக தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்து.

No comments:

Post a Comment