ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்ல மாவன்னல்லை பிரதேசத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தபோது பிரதேச முஸ்லிம் மக்கள் அவரை விரட்டியடித்துள்ளனர். மாவன்னலை ராழியா வரவேற்பு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி கூட்டத்திற்கு மக்கள் பெரும் எதிர்ப்பை காட்டியதை தொடர்ந்து அங்கிருந்து ஹிஸ்புல்லா தலைமறைவாகியதாக அறியமுடிகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாவின் இணைப்பாளர் ஒருவரினால் இந்த கூட்டத்தை நடாத்துவதற்கு மண்டபத்துக்கான கட்டணங்களும் செலுத்தப்பட்டிருந்தன. இந்த விடயத்தை அறிந்த ஊர் மக்கள், குறிப்பிட்ட இணைப்பாளரை கடுமையாக எச்சரித்ததுடன், இனிமேல் இவ்வாறான கூட்டங்களை காத்தான்குடியில் வைத்துக்கொள்ளுமாறும் சமூகங்களுக்கு இடையே குழப்பங்களை ஏற்படுத்தும் இவ்வாறான நிகழ்வுகளை, மாவனல்லை மண்ணில் நடாத்த வேண்டாமெனவும் எச்சரித்தனர்.
ஏற்கனவே, காத்தான்குடியில் உருவாக்கப்பட்ட பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக, மாவனல்லை மண் சந்தித்திருந்த அவல நிலையை சுட்டிக்காட்டிய ஊர் மக்கள், இனிமேல் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எவரும் துணைபோவதை மாவனல்லை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தனர்.
மேலும், காத்தான்குடியில் உருவாகிய சில பயங்கரவாதிகளினால், இந்த நாடு சந்தித்த அவலங்களையும் துயரங்களையும் மாவனல்லை ஏற்பாட்டாளர்கள் ஒருகணம் நினைத்துப் பார்க்க வேண்டுமென கடுந்தொனியில் சுட்டிக்காட்டியதோடு, இனிமேல், மாவனல்லை மண்ணில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எவருமே ஆதரவளிக்கக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
இங்கு வியத்தகு விடயம் யாதெனில், காத்தான்குடியில் இருந்து ஐந்து பஸ்களில் மாவனல்லைக்கு அழைத்து வரப்பட்ட ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்களும் ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாவும் ஊர்மக்களின் கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்து, இடைநடுவே திரும்பிச் சென்றதாக தெரிய வருகின்றது.
No comments:
Post a Comment