Wednesday, October 9, 2019

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி முடிவு வெளியானது. கோத்தாவிற்கு ஆதரவு.

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு தமது ஆதரவினை வழங்குவது என சிறிலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்வதில்லை என அக்கட்சி ஆரம்பத்திலிருந்து அறிவித்துவந்தபோதும் பொதுஜன பெருமுனவுடன் இணைவது தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் பல்வேறு முரண்பாடுகள் தோன்றியிருந்தது. இப்பேச்சுக்களின்போது வேட்பாளரின் சின்னம் தொடர்பாக இருதரப்பும் இணங்க மறுத்திருந்த நிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து அவ்விடயத்தில் தொடர்ந்தும் முரண்டு பிடிக்க முடியாத நிலையில் எதிர்வரும் தேர்தல்களில் இருகட்சியினரும் சிறிலங்க சுதந்திரக் கட்சியின் கதிரைச் சின்னத்தில் போட்டியிடுவது என்ற ஒப்பந்தத்தில் கைப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த முடிவுடன் முற்றுமுழுதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உடன்படவில்லை என்றும் அதன் பிரகாரம் அவர் கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து சற்றுகாலம் ஒதுங்கியிருக்க தீர்மானித்துள்ளார் என்றும் தெரியவருகின்றது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதில் தலைவரே தேர்தல்காலத்தில் கட்சிக்கான தலைமைத்துவத்தை வழங்குவார் என அறியமுடிகின்றது.

தமது முடிவு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தமது ஆதரவு கோத்தாவுக்கானதே அன்றி பொதுஜன பெரமுனவுக்கானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான சிறிபால டி சில்வா அவர்கள் தமது கட்சி முழுமனதுடன் கோத்தாவின் வெற்றிக்காக செயற்படும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment