சஜித் பிறேமதாஸ முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக பேசியுள்ளதற்கான ஆதாரத்தை கேட்கின்றார் அனுர குமார!
இனவாத சம்பவங்களின் போது சஜித் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசியதற்கான ஆதாரங்களை முஸ்லிம்களால் முன்வைக்க முடியுமா? என்று தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பொத்துவிலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நேற்று (24) மாலை பொத்துவில் நகரில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க அவர்களை ஆதரித்து மக்கள் விடுதலை முன்னணியின் சார்பிலான பொத்துவில் பிரதேச சபை உறுப்பினரின் தலைமையில் இடம்பெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
கேட்கப்படுகின்ற கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் பதில் அளிக்கின்ற அல்லது பதில் அளிக்க முடியாமல் திணறுகின்றன 82, 84 வயதை உடைய முதிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற இந்த பாராளுமன்றத்தில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் வயதை 65 ஆக கட்டுப்படுத்த வேண்டும்.
ஒரு கட்சியில் தேர்தல் கேட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய பின்னர் கட்சி தாவுகின்ற கலாச்சாரம் இல்லாதொழிக்க படவேண்டும். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிய தாக்குதலின் பின்னர் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக அதிக அக்கறை செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற இவ்வேளையில் எதிரணியில் இருக்கின்ற இரு பிரதான வேட்பாளர்களும் ஆட்சி அதிகாரத்தை கோரி நிற்கின்றார்கள் இவர்களும், இவர்களின் குடும்பத்தினரும் தான் கடந்த 71 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்து வந்தார்கள்.
இந்த நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் சமூக நல்லிணக்கமும் சமூகப் புரிந்துணர்வுடன் கிறிஸ்தவ, தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாகவும், சம அந்தஸ்துடனும் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
இந்த நாட்டில் மிகப் புனிதமான சேவையை செய்து வருகின்ற இலங்கை பெலிஸார் அவருடைய சேவைகளை திறம்படச் செய்வதற்கு அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கின்ற காரணத்தினால் சரிவர செய்ய முடியாமல் திணறுகிறார்கள். மிகத் திறமையான பொலிஸ் திணைக்களம் எமது நாட்டில் இருக்கின்றது அவர்களுடைய வேலைகளை சரிவர செய்ய முடியாமல் இருப்பதற்கு பிரதான காரணம் ஊழலில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகளும் அரசியல் தலைவர்களுமே. வசீம் தாஜுதீனின் கொலை, சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட ஆகியோரின் கொலை பொலிஸ் திணைக்களத்தினால் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு பிரதானமான காரணம் அரசியல்வாதிகளின் தலையீடு.
ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக்ஷ அவர்களினால் நீதியை நிலைநாட்ட முடியுமா என்று கேட்க விரும்புகின்றேன். எமக்கு தேவையானது எல்லாம் நிம்மதியாக வாழக்கூடிய நமது பிள்ளைகளுக்கான எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது அதற்காகவே தான் நான் உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்க முன்னர் கண்டி திகன அலுத்கம போன்ற பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் அல்லது ஊடகங்கள் முன்னிலையில் வாய்திறந்து முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசி இருக்கிறாரா என்ற கேள்வியை உங்களிடம் கேட்கின்றேன். அப்படி அவர் பேசி இருப்பதற்கான ஆதாரத்தை உங்களிடம் இருந்தால் சமர்ப்பிக்க முடியுமா என்று சவால் விடுக்கின்றேன் என தனதுரையில் மேலும் தெரிவித்தார்.
எஸ்.அஷ்ரப்கான்
0 comments :
Post a Comment