Saturday, October 5, 2019

செஞ்சோலை பிள்ளைகளை நிர்க்கதிக்குள் விட்ட சிறிதரன்

செஞ்சோலைக் காணியை பெற்றுத்தரலாம் என்றும் அதில் சென்று குடியேறுங்கள் எனவும் செஞ்சோலை பிள்ளைகளிடம் கூறி அவர்களை அக்காணிக்குள் குடியேற்றிவிட்டு தற்போது அவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் எதுவும் செய்யாது கைவிட்டுவிட்டார் என செஞ்சோலைப் பிள்ளைகள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலைப் பிள்ளைகளை வரும் 15 ஆம் திகதிக்கு முன் காணியை விட்டு வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகம் எழுத்து மூலமான அறிவித்தலை செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலை பிள்ளைகளின் தற்காலிக வீடுகளில் ஒட்டியுள்ளனர். இதனால் செஞ்சோலைப் பிள்ளைகள் செய்வதறியாது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த வருடம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து குறித்த காணி விடுவிக்கப்பட்டிருந்தது. இதன் பின் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இருந்து வளர்ந்த பிள்ளைகள் திருமணம் செய்த நிலையில் குறித்த காணியில் மீள்குடியேறியிருந்தனர். குறித்த காணி செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை சிறுவர் இல்லங்களுக்காக 2009 க்கு முன் விடுதலைப்புலிகளால் காணி உரிமையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.


ஆனால் தற்போது குறித்த காணி உரிமையாளர்கள் காணி அனுமதி பத்திரம் ஆவணத்தை வைத்துக்கொண்டு குறித்த காணி தங்களுடையது எனவும் அதனை தங்களுக்கே மீளவும் வழங்க வேண்டும் தெரிவித்து யாழ்ப்பாணம் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டினை விசாரித்த மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம் மற்றும் சுற்று 2014 ஆம் ஆண்டு நிருபத்தின் பிரகாரம் காணி அதன் ஆரம்ப உரிமையாளர்களிடமே வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை வழங்கியதன் அடிப்படையில் கரைச்சி பிரதேச செயலாளரினால் காணியை வெளியேறுமாறு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலில் அரச காணியில் அதிகாரமில்லாது ஆட்சி செய்கின்றீர்கள் எனவும் எனவே அக் காணியை விட்டு 15-10-2019 க்கு முன் வெளியேறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் செஞ்சோலை காணிக்கு உரிமை கோருகின்றவர்களுக்கு செஞ்சோலை காணிகளுக்கு பதிலாக மாற்று அரச காணி வழங்கப்பட்டு அரச வீட்டுத்திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் பிரிதொரு காணிச் சட்டத்தின் படி காணியற்ற ஒருவருக்கு இலங்கையில் எப்பகுதிலாவது ஒரு ஒரு அரச காணி மாத்திரமே வழங்க முடியும். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே செஞ்சோலை காணிகளுக்கு உரிமை கோருகின்றவர்களுக்கு அரச காணி வழங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் செஞ்சோலை காணிகள் வழங்கப்படுவது எந்த வகையில் நியாயம் என அங்கு குடியிருக்கும் செஞ்சோலை பிள்ளைகள் கேள்வி எழுப்புகின்றனனர்.

தற்போது செஞ்சோலை காணியில் செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை சிறுவர் இல்லங்களில் இருந்த 54 பேர் குடும்பங்களாக பதிவு செய்துள்ளனர் அவற்றில் பலர் அந்தக் காணியில் தற்காலிக கொட்டகை அமைத்து குடியிருந்தும் வருகின்றனர்.

அத்தோடு கடந்த ஏப்ரல் மாதம் பதினொறாம் திகதி (11-04-2019) அன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்கள் செஞ்சோலை காணிகள் செஞ்சோலைப் பிள்ளைகளுக்கே பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்திருந்தார் ஆனால் அதற்கு பின் எதுவும் நடக்கவில்லை

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com